NATIONAL

எல் நினோ- 1998ஆம் ஆண்டு நீர் நெருக்கடி நிலையை நாடு மீண்டும் எதிர் கொள்ளாது

கோலாலம்பூர், ஜூன் 2– இம்மாதம் தொடங்கி செப்டம்பர் வரை எல் நினோ
பருவநிலை மாற்றத்தை மலேசியா எதிர்கொண்ட போதிலும் கடந்த
1998ஆம் ஆண்டில் ஏற்பட்டதைப் போல் கடுமையான நீர் நெருக்கடி
நாட்டிற்கு ஏற்படாது.

மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் அறிக்கை மற்றும் உலக
வெப்பமயத் தாக்கத்தின் தற்போதைய நிலை ஆகியவற்றைக் கருத்தில்
கொண்டு இவ்வாறு கணிக்கப்படுவதாக ஸ்பான் எனப்படும் தேசிய நீர்
சேவை ஆணையத்தின் வட்டார நடவடிக்கை பிரிவு இயக்குநர் அஸ்ருள்
ராய்மி ரம்லி கூறினார்.

கடந்த 1998ஆம் ஆண்டு நாட்டிலுள்ள அனைத்து நீர்த்தேக்கங்களிலும் நீர்
வற்றிய காரணத்தால் பொது மக்கள் நீண்ட காலத்திற்கு நீர் பற்றாக்குறைப்
பிரச்சனையை எதிர்நோக்கியது போன்ற சம்பவத்தை நீர் நெருக்கடி என
நாம் வகைப்படுத்துகிறோம்.

நாடு முழுவதும் உள்ள அனைத்து 43 நீர்த்தேக்கங்கள் மீதும் ஸ்பான்
மேற்கொண்ட ஆய்வில் ஏறக்குறைய அனைத்து நீர்த்தேக்கங்களும் 90
விழுக்காட்டிற்கும் அதிகமான நீர் கொள்ளளவைக் கொண்டுள்ளது தெரிய
வந்துள்ளது.

ஏறக்குறைய ஐம்பது விழுக்காட்டை எட்டியுள்ள ஏழு நீர்த்தேக்கங்களை
மட்டும் நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இருந்த போதிலும்
இந்த நீர்த்தேக்கங்கள் இன்னம் எச்சரிக்கை அளவை எட்டவில்லை என
அவர் தெரிவித்தார்.

பெர்னாமா டிவியில் நேற்று நடைபெற்ற விவாத நிகழ்வில் கலந்து
கொண்டு பேசிய அவர், நாட்டில் நீர் நெருக்கடி ஏற்படும் சாத்தியம்
தொடர்பான கேள்விக்குப் பதிலளிக்கையில் இவ்வாறு கூறினார்.

கடந்த 1998ஆம் ஆண்டைப் போல் நீர் நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் நீர்
விநியோகம் தொடர்ச்சியாக இருப்பதை உறுதி செய்வதற்கு ஏதுவாக நீர்
பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் 2006 ஆம் ஆண்டு நீர் சேவைத்
தொழில்துறைச் சட்டத்தை அரசாங்கம் அமல்படுத்துவதற்குரிய சாத்தியம்
உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :