ECONOMYMEDIA STATEMENT

கிள்ளான்-சபாக் பெர்ணம் இடையே இரயில் தடம் அமைக்க சிலாங்கூர் அரசு திட்டம்

ஷா ஆலம், ஜூன் 4- கோல சிலாங்கூர் மற்றும் சபாக் பெர்ணம் மாவட்டங்களை உட்படுத்திய மாநிலத்தின் வட பகுதியில் இரயில் தடத்தை அமைக்க சிலாங்கூர் அரசு திட்டமிட்டுள்ளது.

மாநிலத்தின் வட பகுதியான உலு சிலாங்கூரில் கெம்யூட்டர் எனப்படும் பயணிகள் இரயில் மற்றும் இ.சி.ஆர்.எல். எனப்படும் கிழக்குக் கரை இரயில் திட்டம் ஆகிய சேவைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

வெவ்வேறு இடங்களில் உள்ள மக்களை ஒன்றிணைப்பதற்கு ஏதுவாக சிறிய அளவிலான பொது போக்குவரத்துச் சேவைகள் ஏற்படுத்தப்படுவதை மாநில அரசு ஊக்குவிக்கிறது என்று அவர் கூறியதாக உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது.

சிக்கனமான இணைப்பை ஏற்படுத்துவதற்கு ஏதுவாக இந்த திட்டத்தை நாம் வடிமைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. குறைந்த பட்சம்  இதன் தொடர்பில் கொள்கையாவது நாம் வகுக்க முடியும். இவ்வாறு செய்வதன் மூலம் சபாக் பெர்ணமில் வசிக்கும் ஒருவர் ஷா ஆலமில் வேலை செய்வதற்குரிய சாத்தியம் ஒரு நாள் உருவாகும்  என அமிருடின் சொன்னார்.

உண்மையில் மாநிலத்தின் வட பகுதியுடன் நாம் முழுமையான இரயில் போக்குவரத்து இணைப்பைக் கொண்டிருக்கவில்லை. சாலை போக்குவரத்தை எடுத்துக் கொண்டால் கிள்ளானிலிருந்து கோல சிலாங்கூர் மற்றும் சபாக் பெர்ணம் வரை தரைவழி போக்குவரத்து வசதி உள்ளது. ஆனால், இரயில் தொடர்பு சேவை இன்னும் ஏற்படுத்தப்படவில்லை என்றார் அவர்.

பன்னிரண்டாவது மலேசியத் திட்டத்தின் மத்திய கால தவணைக்கான ஆய்வு  தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


Pengarang :