NATIONAL

புக்கிட் அந்தாராபங்சா தொகுதியில் மீண்டும் போட்டியிடத் தயாரா? அஸ்மின் அலிக்கு ஹலிமி சவால்

ஷா ஆலம், ஜூன் 6- கடந்த 2008ஆம் ஆண்டு முதல் சட்டமன்ற
உறுப்பினராக இருந்து வரும் புக்கிட் அந்தாராபங்சா தொகுதியில்
இம்முறை மீண்டும் போட்டியிடத் தயாரா? என்று டத்தோஸ்ரீ அஸ்மின்
அலிக்கு சிலாங்கூர் கெஅடிலான் தகவல் பிரிவுத் தலைவர் ஹலிமி அபு
பாக்கார் சவால் விடுத்துள்ளார்.

நீங்கள் உண்மையில் ஆண்மகனாக இருந்தால் கடந்த மூன்று
தவணைகளாக சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் புக்கிட்
அந்தாராபங்சா தொகுதியை தக்க வைத்துக் கொள்ள இம்முறையும்
போட்டியிடுங்கள் என்று அவர் கூறினார்.

தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் புக்கிட் அந்தாராபங்சா
தொகுதி பாதுகாப்பானது அல்ல எனக் கருதும் காரணத்தால் இத்தேர்தலில்
மோரிப் தொகுதியில் போட்டியிட கோம்பாக் தொகுதியின் முன்னாள்
நாடாளுமன்ற உறுப்பினரான அஸ்மின் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
உலு கிளாங் தொகுதியிலும் அஸ்மின் களம் காணலாம் என முன்னதாக
ஆருடம் கூறப்பட்டது.

மோரிப் தொகுதியில் வாக்கு அலை பெரிக்கத்தான் நேஷனலுக்கு
ஆதரவாக உள்ள வேளையில் புக்கிட் அந்தாராபங்சா தொகுதி பக்கத்தான்
ஹராப்பானுக்கு சாதகமாக உள்ளது.

வேறு தொகுதிகளுக்குச் தப்பிச் செல்வதன் மூலம் வெற்றி பெற்று
விடலாம் என்று சிலாங்கூர் மாநில பெரிக்கத்தான் நேஷனல் தலைவரான
அஸ்மின் பகல் கனவு காணக்கூடாது என்று ஹலிமி சொன்னார்.
மத்திய அரசில் மூத்த அமைச்சர் பதவியை இழந்து விட்ட அஸ்மின்,
சிலாங்கூர் மந்திரி புசார் பதவியை மீண்டும் அடைந்து விடலாம் என
கனவுலகில் சஞ்சரித்துக கொண்டிருக்கலாம்.

இதன் காரணமாக, பொறுப்பற்ற முறையில் மாநிலச் சட்டமன்றம் வரும்
ஜூன் 19ஆம் தேதி கலைக்கப்படும் என்ற அறிவிப்பை அவராகவே
வெளியிட்டார். கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற 15வது பொதுத்
தேர்தலில் மந்திரி புசார் அமிருடின் ஷாரியிடம் தோல்வி கண்டது முதல்
அஸ்மின் கடுமையான உளைச்சலுக்கு ஆளாகியுள்ளது போல்
தோன்றுகிறது என்று ஹலிமி மேலும் தெரிவித்தார்.


Pengarang :