MEDIA STATEMENTPENDIDIKAN

எஸ்.பி.எம். மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி கருத்தரங்கு- ஜூன் 11ஆம் தேதி ஷா ஆலமில் நடைபெறும்

ஷா ஆலம், ஜூன் 8- எஸ்.பி.எம். தேர்வை முடித்த மாணவர்களுக்கு உயர்கல்விக் கூடங்களில்  சேர்வதற்கான வாய்ப்புகள் குறித்து விளக்கும் நோக்கில் இலவசக் கருத்தரங்கை ஷா ஆலம், நற்பணி மற்றும் சமூக நல மேம்பாட்டுக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த கருத்தரங்கு வரும் ஜூன் 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை ஷா ஆலம், செக்சன் 32, கெமுனிங் உத்தாமாவில் உள்ள எம்.பி.எஸ்.ஏ. மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக அக்கழகத்தின் செயலாளர் திருச்செல்வம் பத்மநாபன் கூறினார்.

ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர்களான ராமு நடராஜன் மற்றும்  இஸூவான் காசிம் ஆகியோரின் ஆதரவுடன் நடைபெறும் இந்த கருத்தரங்கில் 250 மாணவர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் சொன்னார்

கடந்தாண்டு எஸ்.பி.எம். தேர்வை எழுதிய மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் கிடைத்துள்ள நிலையில் அடுத்து என்ன செய்வது?, எவ்வாறு உயர்கல்விக் கூடங்களுக்கு விண்ணப்பம் செய்வது? போன்ற கேள்விகள் அவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கும். அக்குழப்பங்களுக்கு தெளிவான விளக்கத்தை வழங்கும் நோக்கில் இந்த கருத்தரங்கு நடைபெறுகிறது என அவர் குறிப்பிட்டார்.

இந்த கருத்தரங்கில் ஐந்து கல்லூரிகளைச் சேர்ந்த கல்வி ஆலோசகர்கள் கலந்து கொண்டு மாணவர்கள் மேற்கொள்ள வேண்டிய அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து தெளிவான விளக்கத்தை அளிப்பார்கள்.

இந்த கருத்தரங்கில்  தாமான்  ஸ்ரீ மூடா இடைநிலைப்பள்ளி, செக்சன் 16 இடைநிலைப்பள்ளி, செக்சன் 19 இடைநிலைப்பள்ளி, செக்சன் 24 இடைநிலைப்பள்ளி மற்றும் புக்கிட் நாகா இடைநிலைப்பள்ளி ஆகிய ஐந்து பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது என்றார் அவர்.

தங்களின் எதிர்கால இலக்கை தீர்மானிப்பதற்கு பெரிதும் துணை புரியக்கூடிய இந்த கருத்தரங்கில் ஷா ஆலம் வட்டாரத்திலுள்ள கடந்தாண்டு எஸ்.பி.எம். தேர்வு எழுதிய மாணவர்கள் தவறாது கலந்து பயன்பெறுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் சார்பில் தாம் கேட்டுக் கொள்வதாக அவர் சொன்னார்.. 

  


Pengarang :