ECONOMYMEDIA STATEMENT

மாநிலத்தில் இலக்கவியல் பார்க்கிங் முறையை 26 லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர்

ஷா ஆலம், ஜூன் 8- இலக்கவியல் முறையில் வாகன நிறுத்தமிட கட்டணங்களை வசூலிக்க உதவும் எஸ்.எஸ்.பி. முறை கடந்த 2018ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் இதுவரை 26 லட்சம் பேர் அந்த ஸ்மார்ட் சிலாங்கூர் பார்க்கிங் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர்.

மாநிலத்திலுள்ள பத்து ஊராட்சி மன்றங்களில் வாகன நிறுத்துமிடக் கட்டணம் மற்றும் அபராதத் தொகையை வசூலிப்பதற்கு அரசாங்கம் அமல்படுத்திய திட்டங்களில் ஒன்றாக இந்த எஸ்.எஸ்.பி. முறை விளங்குவதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்  இங் ஸீ ஹான் கூறினார்.

மாநில அரசு அமல்படுத்திய திட்டங்களில் மிகச்சிறந்த ஒன்றாக இந்த எஸ்.எஸ்.பி. திட்டம் விளங்குகிறது. இந்த திட்டம் குறித்து அனைவரும் திருப்தியடைந்துள்ளதோடு இதன் தொடர்பில் ஏறக்குறைய 100 விழுக்காட்டினர் “சிறப்பு“ என பதிவிட்டு வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

இதுவரை 26 லட்சம் பேர் இந்த எஸ்.எஸ்.பி. செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர். 26 லட்சம் பேர் இதனைப் பயன்படுத்துகின்றனர் என்பது இதன் பொருளாகும். மலேசியாவில் அதிகமானோர் பயன்படுத்தும் வாகன நிறுத்துமிடக் கட்டண செயலியாக இது விளங்குகிறது என்றார் அவர்.

மாநிலம் முழுவதும் உள்ள கார் நிறுத்துமிடங்களில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக ஒரே மாதிரியான செயலி பயன்படுத்தப்படுவதால் ஒவ்வொரு ஊராட்சி மன்றத்திலும் வெவ்வேறு மாதிரியான கார் நிறுத்துமிட கூப்பன்களை வாங்க வேண்டிய அவசியம் கிடையாது என்றும் அவர் சொன்னார்.

இந்த செயலி  மூலம் வாகனமோட்டிகளின் அன்றாடப் பணி எளிதாக்குவதோடு கூப்பன் முறை நிறுத்தப்பட்டு காகிதங்களின் பயன்பாடும் குறைக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :