சிலாங்கூர் மாநில  கெஅடிலான் இளைஞர் மகளிர்ப் பிரிவு தேர்தல் இயந்திரம் தொடங்கப்பட்டது

கோல சிலாங்கூர், ஜூன் 10- சிலாங்கூர் மாநில கெஅடிலான் கட்சியின் இளைஞர் மற்றும் மகளிர்ப் பிரிவின் தேர்தல் இயந்திரத்தை மாநில  கெஅடிலான் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்று தொடக்கி வைத்தார்.

தேர்தல் நடைபெறும் சமயத்தில் பிரசாரப் பணிகளை கவனிக்கும் நோக்கிலான சிலாங்கூர் தேர்தல் மேலாண்மை முறையையும் மாநில பக்கத்தான் ஹராப்பான் தலைவருமான அவர் இந்நிகழ்வில் அறிமுகப்படுத்தினார்.

கடந்த 15வது பொதுத் தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட இந்த முறை தேர்தல் இயந்திரம் செம்மையாக நடைபெறுவதற்கு பயன் தந்தது என்று அமிருடின் சொன்னார்.

வாக்காளர்களைக் கண்டு பிடிப்பதில் இந்த தேர்தல் மேலாண்மை முறை பெரிதும் துணை புரியும். ஆகவே, இளைஞர் மற்றும் மகளிர் பிரிவினர் ஒன்றுபட்டு செயல்படும் அதேவேளையில் யாரும் விடுபடாமலிருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இங்குள்ள கம்போங் பெர்மாத்தாங் பொது மைதானத்தில் நேற்றிரவு தேர்தல் இயந்திரத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கெஅடிலான் கட்சியின் தேசிய மகளிர்ப் பிரிவுத் தலைவி ஜூவாய்ரியா ஜூல்கிப்ளி மற்றும் தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர் அடாம் அட்லி அப்துல ஹலிம் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


Pengarang :