NATIONAL

பணிச்சுமையினால் காட்டில் தலைமறைவான நபர் தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்டார்

ஈப்போ, ஜூன் 10- பணிச்சுமை காரணமாக ஆறு நாட்களாகக் காட்டில்
தலைமறைவான நபர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். சம்பந்தப்பட்ட
நபரிடமிருந்து கிடைத்த அவசர அழைப்பின் பேரில் நடவடிக்கை
மேற்கொண்ட தீயணைப்புத் துறையினர் அவரைப் பத்திரமாக மீட்டனர்.

நேற்றிரவு 11.44 மணியளவில் அந்நபரிடமிருந்து கிடைத்த தொலைபேசி
அழைப்பைத் தொடர்ந்து அவர் அடையாளம் கூறிய இடத்திற்கு
தீயணைப்பு வீரர்கள் விரைந்ததாகப் பேராக் மாநிலத் தீயணைப்பு மற்றும்
மீட்புத் துறையின் நடவடிக்கை பிரிவு உதவி இயக்குநர் சபாரோட்ஸி நோர்
அகமது கூறினார்.

பணிச் சுமையினால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகக் காட்டில் வாழ
முடிவெடுத்த அந்த 41 வயது நபர் கடந்த ஜூன் மாதம் 3ஆம் தேதி
கோலாலம்பூரிலிருந்து பஸ்சில் புறப்பட்டு அமான்ஜெயா பஸ் முனையம்
வந்தடைந்த தாக அவர் சொன்னார்.

எனினும், காட்டில் வழி தவறியதாலும் பசியின் காரணமாகவும் 999 என்ற
அவசர எண்களில் மீட்புக் குழுவினரைத் தொடர்பு கொள்ள அந்நபர்
முயன்றுள்ளார் என்றார் அவர்.

தேடுதல் நடவடிக்கையின் பயனாக நேற்று விடியற்காலை 2.46
மணியளவில் அந்த ஆடவர் மீட்கப்பட்டு போலீசாரிடம்
ஒப்படைக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :