NATIONALSELANGOR

கோல குபு பாரு தொகுதியில் வெ.500,000 செலவில் அடிப்படை வசதிகள் சீரமைப்பு

ஷா ஆலம், ஜூன் 10- சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு
செய்யப்பட்ட 500,000 வெள்ளியை 19 அடிப்படை வசதித் திட்டங்களை
மேம்படுத்துவதற்கு கோல குபு பாரு சட்டமன்றத் தொகுதி
பயன்படுத்தியுள்ளது.

கெர்லிங், இந்து இடுகாட்டில் சடங்குகள் நடத்தும் மண்டபம் அமைப்பது,
ஜாலான் ஹோஸ்ட்டல் அரசு ஊழியர்கள் குடியிருப்பில் சாலையைச்
சீரமைப்பது ஆகியவையும் இந்த சிலாங்கூர் பென்யாயாங் முன்னெடுப்பின்
மூலம் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களாகும் என்று தொகுதி சட்டமன்ற
உறுப்பினர் லீ கீ ஹியோங் கூறினார்.

இவை தவிர, கம்போங் பாயா டாலாமில் உள்ள இரும்பு பாலத்தை
விரிவுபடுத்துவது, சுடுநீர் குளத்தின் மண்டபம் மற்றும் உடைமாற்றும்
இடத்தை தரம் உயர்த்துவது, கம்போங் ஆசாம் கும்பாங் சமூக
மண்டபத்தின் கூரையை மாற்றுவது உள்ளிட்டப் பணிகளும்
மேற்கொள்ளப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.

இந்த திட்டங்களை மேற்கொள்வதில் துணை புரிந்த மாநில அரசுக்கும்
மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரிக்கும் தாம் நன்றி தெரிவித்துக்
கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த சிலாங்கூர் பென்யாயாங் திட்டம் மக்களுக்கு மிகுந்த பலனைத்
தந்துள்ளது. ஆகவே. மாநிலத் தேர்தலுக்குப் பின்னரும் இந்த திட்டம்
தொடரும் என நாங்கள் நம்புகிறோம் என்றார் அவர்.


Pengarang :