NATIONAL

இந்தியச் சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் கடப்பாட்டை ஒற்றுமை அரசாங்கம் கொண்டுள்ளது- அந்தோணி லோக்

ஷா ஆலம், ஜூன் 10- இந்நாட்டிலுள்ள இந்தியச் சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் கடப்பாட்டை ஒற்றுமை அரசாங்கம் கொண்டுள்ளதாக ஜசெக தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் கூறினார்.

எனினும், அமலாக்க ரீதியில் இன்னும் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படாததால் அரசாங்கத்தின் முயற்சிகள் சற்று தாமதமடைவதாக அவர் தெரிவித்தார்.
தேர்தலுக்கு முன்னர் இந்தியச் சமூக அமைப்புகளுடன் தாம் கூட்டங்களையும் சந்திப்புகளையும் நடத்தியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், அச்சமூகத்திற்கு உதவுவதற்கான கடப்பாட்டை தாம் ஒரு போதும் மறக்கவில்லை என்றார்.

இந்நாட்டிலுள்ள அனைத்து இனங்களின் மேம்பாட்டின் மீதும் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, இந்தியச் சமூகம் எதிர்நோக்கும் கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு மற்றும் சமூகவியல் பிரச்சனைகளை அது கவனத்தில் கொண்டுள்ளது.

நாட்டில் குறிப்பாகத் தீபகற்ப மலேசியாவில் பரம ஏழைகள் எண்ணிக்கையைக் குறைப்பதில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தீவிரம் காட்டி வருகிறார். இந்தியச் சமூகத்திலும் பரம ஏழைகள் இருப்பதை நாம் மறுக்க முடியாது. அத்தரப்பினரின் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது அவசியம் என்று அரசாங்கம் உணர்ந்துள்ளது என்றார் அவர்.

இங்குள்ள மிட்லண்ட்ஸ் மாநாட்டு மையத்தில் மலேசியா மடாணி- இந்திய அரசியல் தலைமையின் முன்நகர்வு எனும் ஆய்வரங்கைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் போக்குவரத்து அமைச்சருமான அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எனினும், ஓற்றுமை அரசாங்கத்தின் ஆட்சியில் எந்த பலனும் இதுவரை காணப்படவில்லை எனும் அதிருப்தி மக்கள் மத்தியில் நிலவுவதைப் பரலாக காண முடிகிறது. இந்த நிகழ்ச்சிக்கு வந்த போதும்கூட பலர் உணர்ச்சி வசப்பட்டு தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

இந்த விஷயத்தில் நான் அரசாங்கத்தைத் தற்காக்கும் நோக்கில் பேசுவதாகத் தோன்றினாலும் நாங்கள் ஆட்சிக்கு வந்து ஆறு மாதக் காலம் மட்டுமே ஆகியுள்ளது. பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அரசியல் ரீதியாகப் பல பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகிறார். இருந்த போதிலும் அவரின் விவேகமான செயல்பாடுகள் மூலம் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படும் என நம்புகிறேன் என அந்தோணி லோக் தெரிவித்தார்.


Pengarang :