NATIONAL

இந்தியர் நலன் காக்க  தலைவர்கள் இணைந்து  செயல்பட வேண்டும் டத்தோ ஸ்ரீ அன்வார் கோரிக்கை

ஷா ஆலம், மே.10 –  மலேசிய இந்தியச் சமுதாயப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும்  என்றால் கட்சி அரசியல் தலைவர்களோடு ஒன்று இணைந்து பாடு பட வேண்டும்  என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கோரிக்கையை முன் வைத்தார்.
இந்தியச் சமுதாய எதிர்காலமும், அதன் கல்வி மேம்பாட்டு இலக்கும் என்ற மாநாடு ஷா ஆலமில் கோலக் களமாக நடந்தேறியது. இந்நிகழ்ச்சியில் நாடு முழுவதிலிருந்தும் பி.கெ.ஆர் தலைவர்கள், ஜ.செ.க. தலைவர்கள், ம.இ.கா. தலைவர்கள் என்று 3,000 த்துக்கும் மேற்பட்ட இந்தியத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
நாட்டில் வறுமை ஒழிக்கப்பட வேண்டும். இதில் இனவாதம் இருக்க கூடாது. இனப் பாகுபாடின்றி வறுமை ஒழிக்கப்பட வேண்டும்.
நாடு தற்போது புதிய இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த சூழலில் இனவாத அரசியல் தேவையில்லை என்று அவர் சுட்டிக் காட்டினார்.
வசதி குறைந்தவர்கள் பிரச்சனைகளுக்கு இவ்வாண்டே தீர்வு காணப்பட வேண்டும். தோட்டத்தில் வாழும் இந்தியர்கள் வசதி குறைந்தவர்களாக உள்ளனர். ஏறக்குறைய 130,00 இந்திய குடும்பங்கள் அதில் அடங்குவார்கள்.
வசதி குறைந்தவர்கள் மலாய்க்காரர்கள், இந்தியர்கள், சபா, சரவாக் மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக  இருந்தாலும் அவர்கள் B40 என்ற பிரிவின் கீழ் முழு கவனம் செலுத்தப்படும்.
மலேசியாவில் இந்தியர்கள் பல தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர். இந்தியர்களின் 2வது முக்கிய பிரச்சனைக் கல்வியாகும். தமிழ் பள்ளிகள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ளன. முறையான கழிவறைகள் கூட இல்லாமல் இருக்கின்றன.
இப்பள்ளிகள் முறையாக சீரமைக்கப்பட வேண்டும். இதற்காக கூடுதலாக 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப் பட்டுள்ளது. இந்த சீரமைப்பு பணிகள் முறையாக நிறைவேற்றப் படுகிறதா என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
மேலும் சில பள்ளிகளில் இணை கட்டிடம் தேவைப் படுகிறது. இந்த இணைக் கட்டிடங்களுக்கு மேலும் 35 மில்லியன் ரிங்கிட் கூடுதலாக ஒதுக்க பட்டுள்ளது.
மேலும் வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் 8 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 7 லட்சம் இந்தியர்கள் பயன் அடைவார்கள். இவர்களுக்கு 600 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப் பட்டுள்ளன என்று டத்தோ ஸ்ரீ அன்வார் தெரிவித்தார்.
மேலும் நாடு மாற்றத்தை நோக்கி செல்கிறது. இனி இன வாரியாகத் திட்டங்கள் மேற்கொள்ள முடியாது. இன்று இந்தியர்களுக்கு நிதி ஒதுக்கினேன் என்று தெரிவித்தால் மலாய்க்காரர்களைப் புறம் தள்ளி விட்டார் என்று இனவாத வெறுப்புகளை ஒரு தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியச் சமுதாயத்தின் மேம்பாட்டுக்குப் பொருளாதாரம் மற்றும் பயிற்சிகளை மித்ரா  மூலம்  மேற்கொள்ளப்படும் என்று டத்தோ ஸ்ரீ அன்வார் தெரிவித்தார்.
இன்றைய நிகழ்ச்சியில் கட்சி அரசியல் வேறுபாடின்றி இந்தியச் சமுதாயத் தலைவர்கள் கலந்து கொண்டதைப் பாராட்டினர்.

Pengarang :