MEDIA STATEMENT

கீழ் நிலை போலீஸ்காரர்களை ஏளனம் செய்த பெண் இன்ஸ்பெக்டர் கைது

கோலாலம்பூர், ஜூன் 18- கீழ் நிலை போலீஸ்காரர்களை நிந்திப்பதை சித்தரிக்கும் காணொளி ஒன்றில் இடம் பெற்றுள்ள பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் இரு குற்றப்பத்திரிகைகள் தொடர்பில் கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் இன்று தடுத்து வைக்கப்பட்டார்.

குற்றவியல் சட்டத்தின் 186 வது பிரிவு மற்றும் 1955ஆம் ஆண்டு சிறு குற்றச் சட்டத்தின் 14 வது பிரிவின் கீழ் வாக்குமூலம் அளிப்பதற்காக மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு வந்த போது அந்த இன்ஸ்பெக்டர் தடுத்து வைக்கப்பட்டார்.

கடந்த வியாழக்கிழமை பத்து கேவ்ஸ், தாமான் ஸ்ரீ கோம்பாக்கில் இரு போலீஸ்காரர்களுடன் ஏற்பட்ட வாய்த்தகராறு தொடர்பில் அந்த அதிகாரி முதன் முறையாக நேற்று விசாரணைக்கு அழைக்கப் பட்டதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் கூறினார்.

இன்று மறுபடியும் விசாரணைக்கு அழைக்கப்பட்ட அந்த அதிகாரி, இரு விசாரணை அறிக்கைகள் தொடர்பாக மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டார் என அவர் குறிப்பிட்டார்.

அரசு பணியாளரை வேலை செய்ய விடாமல் தடுத்தது மற்றும் பிறரை அவமதிக்கும் வகையில் தரக்குறைவான வார்த்தைகளை பிரயோகித்தது ஆகிய குற்றங்களின் பேரில் அந்த பெண் அதிகாரி விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் சொன்னார்


Pengarang :