Orang ramai hadir sempena program sambutan perayaan Ponggal peringkat Negeri Selangor Tahun 2023 di Kuil Sri Swarna Maha Mariaman Alayam, Shah Alam pada 11 Februari 2023. Foto FIKRI YUSOF/SELANGORKINI
EKSKLUSIFMEDIA STATEMENT

கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமை அரசுக்கு ஆதரவளிப்போம்- இந்திய சமூகத்திற்கு கணபதி ராவ் வேண்டுகோள்

ஷா ஆலம், ஜூன் 24- நாட்டிலுள்ள ஆறு மாநிலங்களில் விரைவில் நடைபெறவிருக்கும் தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான்- பாரிசான் நேஷனல் கூட்டணிக்கு இந்திய சமூகம் ஒருமித்த ஆதரவை வழங்க வேண்டும் என சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கேட்டுக் கொண்டார்.

இனவாத மற்றும் மதவாத தரப்பினரிடமிருந்து ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்கு இந்திய சமூகம் தங்களிடையே காணப்படும் அரசியல் கருத்து வேறுபாடுகளையும் பகைமைப் போக்கையும் மறந்து ஒன்று பட்டு ஒரே குடும்பமாக செயல்படுவது அவசியம் என்று அவர் சொன்னார்.

பாஸ் மற்றும் பெர்சத்து ஆகிய கட்சிகள் கடந்தாண்டு தேர்தலின் போது மத, சமய விவகாரங்களை முன்வைத்து செய்த விஷப் பிரசாரங்களை நாம் பார்த்தோம். இதன் விளைவாக அதன் உரியப் பலனை அவர்கள் பெற்றனர். அத்தகைய சூழல் மறுபடியும் ஏற்படாமலிருக்க விரைவில்  ஆறு மாநிலத் தேர்தல்களில் இந்திய சமூகம் பகைமையை  ஒதுக்கி தள்ளிவிட்டு  ஒருமித்த கருத்துடன் செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

நேற்று இங்குள்ள மாநில அரசு தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலயங்களுக்கு மாநில அரிசின் மானியம் வழங்கும் நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நமது மொழி வாழ, தலைமுறை வாழ, சமயம், வாழ, நாம் இந்த நாட்டின் குடிமகனாக வாழ தயவு செய்து வெளியே வாருங்கள். வீம்புக்காக நாம் ஒதுங்கி நின்றாலும் ஓட்டு போட வராவிட்டாலும் கூட யாருக்கு அது சாதகமாக அமையும் என்று உங்களுக்குத் தெரியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.. 

யார் ஆண்டால் என்ன? எனது ஒரு வாக்கினால் என்ன மாற்றம் ஏற்படப் போகிறது என்று கருதினால் தீவிரவாத போக்குடையத் தரப்பினருக்கு நீங்கள் மறைமுகமாக ஆதரவளித்ததாக ஆகி விடும் என்றும் அவர் எச்சரித்தார்.

சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு, கெடா ஆகிய மாநிலங்களில் இந்தியர்களின்  வாக்கு பலம் கணிசமான அளவு உள்ளதாக கூறிய கணபதிராவ், பல தொகுதிகளில் வெற்றியைத் தீர்மானிக்கும் இடத்திலும் அவர்கள் உள்ளதாக குறிப்பிட்டார்.

மலாக்கா மாநிலத்தில் அலட்சியமாக இருந்து கோட்டை விட்ட சம்பவம்  இந்த ஆறு மாநிலத் தேர்தல்களிலும்  மீண்டும் நிகழக்கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :