மாநில நிர்வாகம் சீராக நடைபெறுவதை பராமரிப்பு அரசாங்கம் உறுதி செய்யும்

ஷா ஆலம், ஜூன் 24- சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்ட போதிலும் சீரான நிர்வாகம், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு தன்மையை உறுதி செய்ய மாநில நிர்வாகம் தொடர்ந்து பராமரிப்பு அரசாங்கமாக செயல்பட்டு வரும்.

மாநிலத்தின் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறிப்பாக அரசின் சேவை முறை சீராக நடைபெறுவதை உறுதி செய்ய பராமரிப்பு அரசாங்கத்தின் பங்களிப்பு அவசியம் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தங்கள் செயல் குழுக்களின் தலைவர்கள் என்ற முறையில் சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர் எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகளை அமல்படுத்தும் பணியை மேற்கொள்வர். இக்காலக்கட்டத்தில் அவர்கள் கொள்கைகளில் மாற்றம் செய்யவும் புதிய அம்சங்களைச் சேர்க்கவும் மாட்டார்கள் என்று அவர் சொன்னார்.

சிறந்த நிர்வாக முறை கோட்பாடு தொடர்ந்து நிலைநிறுத்தப்படுவதை உறுதி செய்ய அரசியல் நிகழ்வுகளுக்குச் செல்லும் போது அதிகாரப்பூர்வ வாகனங்களைப் பயன்படுத்த வேண்டாம் என ஆட்சிக்குழு உறுப்பினர்களைத் தாம் பணித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் வேட்பு மனு தாக்கல்  செய்ய படுவதற்கு முன்னர் அனைத்து ஆட்சிக்குழு உறுப்பினர்களும் தாங்கள் அதிகாரப்பூர்வ கார்களை ஒப்படைத்து விடுவர் என்று அவர் மேலும் கூறினார்.

சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு ஏதுவாக 14வது சட்டமன்றம் நேற்று அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது.


Pengarang :