MEDIA STATEMENTNATIONAL

மருத்துவமனை, பொது போக்குவரத்து சேவைகளில் முகக்கவரி அணிவது கட்டாயமில்லை

கோலாலம்பூர், ஜூன் 29- வரும் புதன்கிழமை தொடங்கி மருத்துவமனைகள் மற்றும் பொது போக்குவரத்து சேவைகளில் முகக்கவரி அணிவது கட்டாயமல்ல என்று சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் கிளினிக், மருத்துவமனை அல்லது பொது போக்குவரத்து சேவையைப் பயன்படுத்தும் போது  முகக்கவரி  அணிய வேண்டும் (கட்டாயமில்லை) என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தாபா கூறினார்.

மேலும் கோவிட்-19 நோய்த் தொற்று கண்டறியப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தும் நாட்களின் எண்ணிக்கையும் ஏழில் இருந்து ஐந்தாக குறைக்கப்படுவதாகவும் அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

கடந்த ஐந்து வாரங்களாக கோவிட்-19 நோய்த் தொற்று பரவல் எண்ணிக்கை 53.5 விழுக்காடும் மரண எண்ணிக்கை 35.3 விழுக்காடும் குறைந்துள்ளதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரை மேற்கோள் காட்டி பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

நாடு தற்போது கோவிட்-19 நோய்த் தொற்று எண்டமிக் கட்டத்திற்கு மாறியுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளது குறித்து கருத்துரைத்த ஜலிஹா, இதன் தொடர்பில் அமைச்சரவை முடிவெடுக்கும் என்று சொன்னார்.

எண்டமிக் கட்டத்திற்கு மாற அமைச்சரவை இணக்கம் தெரிவிக்கும் பட்சத்தில் புதிய நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறை (எஸ்.ஒ.பி.) அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :