MEDIA STATEMENTNATIONAL

“ஓப் சம்சிங்“ சாலைத் தடுப்புச் சோதனையில் 284 பேர் பிடிபட்டனர் 

அலோர்ஸ்டார், ஜூன் 29- ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு இங்குள்ள ஜாலான் பெகாவாயில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட “ஓப் சம்சிங்“ சாலைத் தடுப்பு சோதனை நடவடிக்கையில் பல்வேறு குற்றங்களுக்காக 284 பேர் பிடிபட்டனர்.

பிடிபட்டவர்களில் சமூக ஊடக ஊக்குவிப்பாளர் ஒருவரும் அடங்குவார் என்று கோத்தா ஸ்டார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அகமது சுக்ரி மாட் ஆகிர் கூறினார். 

நேற்றிரவு 11.00 மணி முதல் இன்று விடிற்காலை 3.00 மணி வரை மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் 23 வயதுடைய அந்த சமூக ஊடக ஊக்குவிப்பாளர் உள்பட 284 பேர் தடுத்து வைக்கப்பட்டனர் என்று அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பெண்களும் அடங்குவர். அவர்கள் 15 முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள் என்பதோடு மேலும் பத்து பேர்  குறைந்த வயதுடையவர்கள் என்று அவர் இங்குள்ள கோத்தா ஸ்டார் மாவட்ட போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் குறிப்பிட்டார்.

இந்த சோதனையின் போது 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் 64(1) பிரிவின் கீழ் 50 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்றார் அவர்.

வானமோட்டும் லைசென்ஸ் இல்லாதது, மோட்டார் சைக்கிள்களை மாற்றியமைத்தது, பின்புறம் பார்க்கும் கண்ணாடி இல்லாதது, காப்புறுத் இல்லாதது, லைசென்ஸ் காலாவதியானது ஆகிய குற்றங்களுக்காக 194 குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

பிடிபட்ட அனைவரும் ஆவணப் பதிவு நடவடிக்கைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.


Pengarang :