MEDIA STATEMENT

ஹாடி அவாங் உடல்நிலை குறித்து அநாகரிக கருத்தை வெளியிட்டவர் மன்னிப்பு கோர வேண்டும் –பிரதமர் வலியுறுத்து

கோலாலம்பூர், ஜூலை 2- உடல்நலக்குறைவு காரணமாக  மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வரும் பாஸ் கட்சித் தலைவர்  டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் குறித்து அநாகரீகமான முறையில்சமூக ஊடகங்களில் கருத்தைப் பதிவிட்ட நபர் உடனடியாக மன்னிப்பு  கோர வேண்டும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்  வலியுறுத்தியுள்ளார்.

அந்த நபரின் அச்செயல் குறித்து தாம் வருத்தமடைவதாக அன்வார்  ட்விட்டர் வழி நேற்றிரவு வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளார்.  ஜாக்கி யாமினியின் அந்த கடுமையான கருத்து குறித்து நான்  வருத்தமடைகிறேன். அவர் உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும்
என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.

அப்துல் ஹாடி அவாங் மரணமடைவதற்கு தாம் பிரார்த்திப்பதாக ஜாக்கி  யாமானி எனும் ட்விட்டர் கணக்கின் உரிமையாளர் டிவிட்டரில்   பதிவிட்டிருந்தார்.

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீருக்கு இதே நிலை ஏற்படத் தாம்
பிரார்த்திப்பதாகவும் அந்த பதிவில் அந்நபர் குறிப்பிட்டிருந்தார்.
தன் தந்தை ஹாடி அவாங்கின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாகவும்
அவர் உடல் நலம் பெற பிரார்த்திக்கும்படியும் ஹாடி அவாங்கின் புதல்வர்
முகமது காலில் நேற்று தனது பேஸ்புக் பக்கத்தில் பொது மக்களைக்
கேட்டுக் கொண்டிருந்தார்.


Pengarang :