ALAM SEKITAR & CUACA

மேற்கு சூறாவளியால் வட மாநிலங்களில் மோசமான வானிலை அபாயம்- தயார் நிலையில் பொது தற்காப்பு படை

கோலாலம்பூர், ஜூலை 2- மேற்கு சூறாவளி மற்றும் இடியுடன் கூடிய கனமழை போன்ற இயற்கை பேரிடர்கள் நாட்டின் வட மாநிலங்களில் ஏற்படும் சாத்தியத்தைக் கருத்தில் கொண்டு  மலேசிய பொது தற்காப்புப் படையின் (ஏ.பி.எம்.) 427 உறுப்பினர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

வட மாநிலங்களில் வரும் புதன் கிழமை வரை மோசமான வானிலை நிலவும் என்பதால் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படும் சாத்தியம் உள்ள இடங்களில் கண்காணிப்பு பணியை தங்கள் உறுப்பினர்கள் தினசரி மேற்கொள்வர் என்று ஏ.பி.எம். தலைமை ஆணையர் அமினுரஹிம் முகமது கூறினார்.

பலத்த காற்றின் காரணமாக மரங்கள் முறிந்து விழுவதற்கான சாத்தியம் உள்ளதால் அதன் மீது கவனம் செலுத்தும் படி சம்பந்தப்பட்ட தரப்பினரை நான் கேட்டுக் கொண்டுள்ளேன். இத்தகைய சம்பவங்கள் நிகழும் பட்சத்தில் அது குறித்து உடனடியாக ஊராட்சி மன்றங்களிடம் தெரிவிக்கப்படும் என அவர் சொன்னார்.

வரும் புதன்கிழமை வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் மேற்கு காற்றின் தாக்கத்தால் கிளந்தான் மற்றும் திரங்கானு ஆகிய மாநிலங்களும் பாதிக்கப்படும் என்று மலேசிய வானிலை ஆய்வுத் துறை நேற்று   அறிக்கை ஒன்றின் வாயிலாக கூறியிருந்தது.

இதனிடையே, வானிலை ஆய்வுத் துறையின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தாங்களும் முழு தயார் நிலையில் இருந்து வருவதோடு சம்பந்தப்பட்ட இடங்களில் குறிப்பாக கடற்கரைகளில் தீவிர ரோந்து பணியை மேற்கொள்ள இருப்பதாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ அப்துல் வஹாப் மாட் யாசின் கூறினார்.


Pengarang :