MEDIA STATEMENT

தாமான் செந்தோசா  பண்டார் செந்தோசாவாகத்  தரம் உயர்த்துவேன்.

கிள்ளான்.ஜூலை.2-  செந்தோசா சட்டமன்றத் தொகுதிக்கு மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு கிட்டுமேயானால் கண்டிப்பாகத் தாமான் செந்தோசாவைப் பண்டார் செந்தோசாவாகத் தரம் உயர்த்தப் பாடுபடுவேன் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் தெரிவித்தார்.

செந்தோசா சட்டமன்றத் தொகுதி நடவடிக்கைகளை இது நாள் வரையில் செய்தி சேகரிக்க வந்த ஊடகவியலாளர்களுக்கு நன்றி கூறும் நிகழ்வைக் கிள்ளான் , ஐ சிட்டி வணிக தளத்தில்  உள்ள தங்கும் விடுதியில் சந்தித்த போது இவ்வாறு கூறினார்.

ஐந்தாண்டுகளுக்கு முன்பு செந்தோசா சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்ட போது செந்தோசா கருப்பு பட்டியலிடப்பட்ட இடமாகப் பேசப் பட்டது. ஆனால்  சட்டமன்ற உறுப்பினராக தேர்வு பெற்ற பின்னர் மேற்கொண்ட தீவிர நடவடிக்கைக்குப் பின் செந்தோசாவில் குற்றவியல் நடவடிக்கை பெரும்பான்மையாகக் குறைக்கப்பட்டு விட்டது.

தாமான் செந்தோசாவைப் பண்டார் செந்தோசாவாகத் தரம்  உயர்த்துவேன். விரைவில் கிள்ளான் நகராண்மை கழகம், மாநகராட்சியாக  தரம் உயர்த்தப் படவிருக்கிறது. ஆதற்கு முன்பு பண்டார் செந்தோசாவைத்  தரம் உயர்த்துவேன் என்றார்.

செந்தோசா வட்டாரத்தில் நிலவிவரும்  சாலை வசதி, வடிகால் பிரச்சனை பெரும்பான்மையாக தீர்வு காணப்பட்டு விட்டது. குற்றவியல் நடவடிக்கையும் குறைக்கப்பட்டு விட்டது.

இத்தொகுதியில் நிலவிய குப்பை தொட்டி பிரச்னைக்கும் படிப்படியாகத் தீர்வு கண்டு வருகிறேன். இதே போல் வெள்ளப் பிரச்னைக்கும் கிள்ளான் நகராண்மைகழகத்தின் உதவியோடு தீர்வு கண்டு வருகிறேன்.

கோவிட் 19 பெருந்தொற்று காலக் கட்டத்திலும் உணவு பிரச்சனைகள் முறையாகத் தீர்வு கண்டேன்.

இவை அனைத்தும் ஊடகவியலாளர்களின் ஒத்துழைப்போடு தான்  மேற்கொண்டதாக அவர் கூறினார். கடந்த 5 ஆண்டு காலத்தில் 742 செய்திகள் ஊடகத்தின் வழி வெளியாகியுள்ளது. ஊடகத்தின் ஒத்துழைப்பால் தான் இத்தொகுதி பிரச்சனைகள் முறையாகத் தீர்வு காணப் படுகின்றன. இதனால், ஊடகவியலாளர்களின் மகத்தான சேவைக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.

இத்தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்களில் 80% வாக்காளர்கள் பி.கே.ஆர் கட்சிக்கு வாக்களிப்பார்கள். இதே போல் சிலாங்கூரில் உள்ள 13% இந்திய வாக்காளர்கள் 80% ஒற்றுமை அரசுக்குத் தான் வாக்களிப்பார்கள். அதன் வழி சிலாங்கூரில் மீண்டும் ஒற்றுமை அரசு அமைவது உறுதி என்றார் அவர்.

சிலாங்கூர், நெகிரி,செம்பிலான்  பினாங்கு, கெடா ஆகிய அனைத்து மாநிலங்களிலும் ஒற்றுமை அரசு அமைவதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

இதன் வழி  பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் மத்திய அரசு வலுவாக இருக்கும்.  அடுத்த 5 ஆண்டுகளுக்கு மத்தியத்தில் வலுவான ஆட்சி இருக்க வேண்டும். இதை உறுதி செய்ய சிலாங்கூர் தொடர்ந்து ஒற்றுமை அரசாக நீடிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் 60க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசு கொடுத்து மகிழ்வித்தார்.


Pengarang :