MEDIA STATEMENTSELANGOR

சிலாங்கூரைத் தற்காக்க முழு தயார் நிலையில் ஹராப்பான், பாரிசான் தேர்தல் இயந்திரம்

ஷா ஆலம், ஜூலை 8- ஒற்றுமை அரசாங்கத்தின் வலுவான கோட்டையாக சிலாங்கூர் தொடர்ந்து விளங்குவதை உறுதி செய்ய பக்கத்தான் ஹராப்பான் மற்றும் தேசிய முன்னணி தயார் நிலையில் உள்ளன.

துரோகிகள் மற்றும் நாட்டை நாசமாக்கியவர்கள் கையில் சிலாங்கூர் விழாதிருப்பதை உறுதி செய்வதற்காக ஒன்று பட்டு செயல்பட அவ்விரு கூட்டணிகளும் உறுதிபூண்டுள்ளாக சிலாங்கூர் பக்கத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

தேசிய முன்னணியுடனான உறவு தேர்தலுடன் முடியப்போவதில்லை. மாறாக, கூட்டரசு நிலையில் உருவான இந்த கூட்டணி தொடரும் என்று அவர் தெரிவித்தார்.

ஒற்றுமை அரசாங்கத்தின் வலுவான கோட்டையான இந்த மாநிலத்தை தற்காப்பதற்கு ஏதுவாக தேசிய முன்னணியுடன் ஒன்றுபட்டு செயல்படும்படி ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டது முதல் வலியுறுத்தி வந்துள்ளேன் என்று மாநில மந்திரி  புசாருமான அவர் சொன்னார்.

நேற்று இங்குள்ள பண்டார் பாரு பாங்கியில் ஒற்றுமை அரசாங்கத்தின் தேர்தல் இயந்திரத்தை தொடக்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் இந்த தொடக்க விழா நடைபெற்றது.

பக்கத்தான்-பாரிசான் தேர்தல் இயந்திரங்கள் ஒன்றுபட்டு சிலாங்கூரைத் தற்காக்க பாடுபடும் என்று சிலாங்கூர் அம்னோ தலைவர் டத்தோ மெகாட் ஜூல்கர்னாய்ன் ஓமார்டின் கூறினார்.

இரு கூட்டணிகளுக்கும் இடையிலான தொகுதி பங்கீடு முற்றுப் பெற்று விட்டதாக கூறிய அவர், மக்களை நாடி பிரசாரத்தில் ஈடுபடுவதில் இரு கூட்டணிகளும் மும்முரம் காட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

 


Pengarang :