EKSKLUSIFMEDIA STATEMENTSELANGOR

கடும் போட்டி நிலவினாலும் வட சிலாங்கூர் தொகுதிகளை வெற்றி கொள்ள ஹராப்பான்-பாரிசான் நம்பிக்கை

கோம்பாக், ஜூலை 10- கடும் போட்டிக்கு மத்தியிலும் வட சிலாங்கூர் தொகுதிகளை வெற்றி கொள்ள பக்கத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் கூட்டணிக் கட்சிகள் பெரும் நம்பிக்கைக் கொண்டுள்ளன.

அந்த பகுதியை கைப்பற்றுவதற்கு உரிய ஆற்றல் இந்த ஒற்றுமைக் கூட்டணிக்கு உள்ளது என தாம் நம்புவதாக சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

உண்மையைச் சொன்னால், வட சிலாங்கூர் தொகுதிகள் எந்த கட்சியின் பாரம்பரிய கோட்டைகளாக எந்த காலத்திலும் இருந்ததில்லை. முன்பு பாரிசான் நேஷனலின் வலுவான கோட்டையாக விளங்கி வந்த இத்தொகுதிகளை கடந்த 2018 ஆம் ஆண்டில் ஹராப்பான் வெற்றிகரமாக ஊடுருவியது என அவர் தெரிவித்தார்.

நமது திட்டங்கள் மற்றும் நமது புதிய பங்காளியான பாரிசானின் ஆதரவின் வாயிலாக ஒற்றுமை அரசாங்கத்தின் வசம் இத்தொகுதிகளை இம்முறை கொண்டு வர முடியும் என நம்புகிறேன் என்றார் அவர்.

நேற்று இங்குள்ள பத்து கேவ்ஸ் சில் மடாணி அஃபியாட் எனும் நிகழ்வைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மாநிலத்தின் வட பகுதியை மட்டும் இலக்காக கொண்ட பெரிக்கத்தான் நேஷனலின் பிரசார நடவடிக்கைகள் மாநிலத்தை வெல்வதில் அந்த கூட்டணிக்கு உள்ள அவநம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது என்றும் அவர் சொன்னார்.

மாறாக, அந்த பகுதியில் வலுவான எதிர்க்கட்சியாக விளங்க வேண்டும் என்பது மட்டும் அவர்களின் குறிக்கோளாக உள்ளதை இந்நடவடிக்கை புலப்படுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

பெரிக்கத்தான் நேஷனல் மாநிலத்தின் வட பகுதியை மட்டும் இலக்காக கொண்டுள்ளது. சிலாங்கூரை  வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை அந்த கூட்டணி கொண்டிராததை இந்த நடவடிக்கை காட்டுகிறது என அவர் மேலும் கூறினார்.


Pengarang :