ELSELANGOR

அரசியல் நிலைத்தன்மை காரணமாக சிலாங்கூர் அபரிமித வளர்ச்சி- உள்நாட்டு உற்பத்தியிலும் பெரும் பங்களிப்பு

கோம்பாக், ஜூலை 10- பக்கத்தான் ஹராப்பான் தலைமையிலான அரசில் காணப்படும் அரசியல் நிலைத்தன்மை, பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் துணை புரிந்து கடந்தாண்டு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் பங்களிப்பையும் வழங்கியுள்ளது.

மக்களின் ஆணை கிடைத்தப் பின்னர் மாநில அரசு கடந்த தவணை காலம் முழுவதும் மேம்பாடு மற்றும் மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளித்து வந்துள்ளதாக சிலாங்கூர் மாநில ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு அதிக பங்களிப்பை வழங்கும் மாநிலமாக சிலாங்கூர் விளங்கி வருகிறது. இவ்வாறு இது நிகழ்ந்தது? காரணம் நாம் மந்திரி பெசாரை மாற்றவில்லை. தவணைகாலம் முடியும் வரை நாம் நிலைத்தன்மையுடன் இருந்துள்ளோம் என்றார் அவர்.

மேம்பாடு மற்றும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நம்மால் அமல்படுத்த முடிந்தது. மக்களின் நலனுக்காக சில திட்டங்களை மாற்றியுள்ளோம். நாம் ஏழைகளுக்கு மட்டும் உதவ வில்லை. மாறாக, ஏழ்மையையும் ஒழித்துள்ளோம் என அவர்  சொன்னார்.

நேற்று இங்கு சுங்கை துவா சட்டமன்றத் தொகுதி நிலையிலான தேர்தல் இயந்திரத்தை தொடக்கி  வைத்து உரையாற்றுகையில் மாநில மந்திரி புசாருமான அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த 2022ஆம் ஆண்டு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25.5 விழுக்காட்டு பங்களிப்பை சிலாங்கூர் வழங்கியுள்ளதாக தேசிய புள்ளி விபரத் துறையின் அறிக்கை கூறியது. அதற்கு முந்தைய ஆண்டு இந்த எண்ணிக்கை 24.8 விழுக்காடாக மட்டுமே இருந்தது.


Pengarang :