NATIONAL

நாயை சித்திரவதை செய்து கொன்றதாக நம்பப்படும் மூவர் கைது

பாலிக் பூலாவ், ஜூலை 10 – கம்போங் தெலுக் தெம்போயக், பத்து மாங்கில் நாயை சித்திரவதை செய்து கொன்றதாக நம்பப்படும் மூன்று பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர். வெள்ளிக்கிழமை நடந்த இச்சம்பவத்தின் வீடியோ வைரலாகப் பரவியதையடுத்து காவல்துறையினர் இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நேற்றிரவு சுமார் 11.45 மணி தொடங்கி இன்று அதிகாலை 1 மணி வரை பத்து மாங்கில் உள்ள வெவ்வேறு இடங்களில் 40 முதல் 53 வயதுக்குட்பட்ட அந்த மூன்று ஆண்கள் கைது செய்யப்பட்டனர் என பினாங்கு காவல்துறைத் தலைவர் டத்தோ காவ் கோக் சின் கூறினார்.

“அந்த மூவரும் சரக்கு முகவர், மீனவர் மற்றும் பேருந்து ஓட்டுநர் ஆவர். அவர்கள் விலங்குகள் நலச் சட்டம் 2015ன் பிரிவு 29(1)ன் கீழ் இந்த வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக ஜூலை 12ஆம் தேதி வரை மூன்று நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

“அந்த மூவருக்கும் முந்தைய குற்றவியல் பதிவுகள் எதுவும் இல்லை. மேலும் அவர்கள் போதைப்பொருளும் உட்கொள்ளவில்லை என்றும் சோதனை முடிவுகள் காட்டுகின்றன,” என்று காவ் கோக் சின் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (ஜூலை 7) இரவு 8.38 மணியளவில் நடந்த தாகக் கருதப்படும் இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

“இந்தச் சம்பவத்தைப் புகார்தாரர் நேரில் பார்த்தார். அவர் அதை பதிவு செய்து நண்பருக்கு அனுப்பியதைத் தொடர்ந்து அது ட்விட்டரில் வைரலானது.

“விலங்குகளை துஷ்பிரயோகம் செய்பவர்கள் அல்லது அடிப்பவர்கள் மீது நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம்,” என்று காவ் கூறினார். மேலும், அந்த வீடியோவைப் பரப்புவதை நிறுத்துமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

– பெர்னாமா


Pengarang :