NATIONAL

கோல குபு பாரு இடைத் தேர்தல்- வாக்காளர்கள் வசதிக்காக வேன், ‘பகி‘ சேவை- தேர்தல் ஆணையம் ஏற்பாடு

உலு சிலாங்கூர், மே 7- எதிர்வரும் மே 11ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோல
குபு பாரு இடைத் தேர்தலின் போது வாக்காளர்களின் வசதிக்காக
வாக்களிப்பு மையங்களில் வேன் மற்றும் ‘பகி‘ எனப்படும் இலகு ரக
பயணிகள் வண்டி சேவையை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

பொது மக்கள் குறிப்பாக மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்
திறனாளிகளின் வசதிக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கோல குபு
பாரு தொகுதி இடைத் தேர்தலுக்கான தேர்தல் அதிகாரி யுஹானாஸ்
அவுரீ கூறினார்.

இந்த தேர்தலை முன்னிட்டு நாங்கள் 18 வாக்களிப்பு மையங்களைத்
திறக்கவுள்ளோம். அவற்றில் சில குன்றுகள் மீதும் மேடான பகுதிகளிலும்
அமைந்துள்ளன. ஆகவே வாக்காளர்களின் வசதிக்காக வேன் மற்றும் பகி
சேவையை ஏற்பாடு செய்துள்ளோம் என்றார் அவர்.

ஜனநாயக உணர்வின் அடிப்படையில் தங்கள் கடமையை நிறைவேற்ற
அனைத்து வாக்காளர்களும் மறவாது வாக்களிக்க வருமாறு கேட்டுக்
கொள்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.

கோல குபு பாருவிலுள்ள அரச மலேசிய போலீஸ் படை அகடாமியின்
சமூக மண்டபத்தில் உள்ள தொடக்கக் கட்ட வாக்களிப்பு மையத்தில்
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் இதனைக் கூறினார்.

இன்று காலை 10.00 வரை காவல் துறையைச் சேர்ந்த 33 விழுக்காட்டினர்
தங்கள் வாக்குகளைச் செலுத்தியாக அவர் சொன்னார்.

கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினரான லீ கீ ஹியோங் (வயது 58)
புற்றுநோய் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் 7ஆம் தேதி காலமானதைத்
தொடர்ந்து அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

வரும் மே 11ஆம் தேதி நடைபெறவிருக்கும் இந்த இடைத் தேர்தலில்
ஒற்றுமை அரசு. பெரிக்கத்தான் நேஷனல், பி.ஆர்.எம் மற்றும் சுயேச்சை
வேட்பாளர் இடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.


Pengarang :