MEDIA STATEMENTNATIONAL

சனுசி குற்றஞ்சாட்டப்பட்டதற்கும் அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை- மந்திரி புசார் கூறுகிறார்

கோலாலம்பூர், ஜூலை 19. பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது சனுசி முகமது நோருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கும் அரசியலுக்கும் எந்த தொடர்பு இல்லை என்பதோடு இந்நடவடிக்கையின் பின்னணியில் எந்த உள்நோக்கமும் இருந்ததில்லை என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சனுசி வெளியிட்ட கருத்துகள் வரம்பு மீறியவை என்பதோடு சிலாங்கூர் அரச அமைப்பை கீழறுக்கும் நோக்கத்தையும் கொண்டிருந்தது என்று அவர் சொன்னார்.

சனுசி தமதுரையில் மந்திரி புசார் என்ற முறையில் என்னை மட்டுமல்லாது மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களையும் விமர்சித்துள்ளார்.

ஆகவே, சுல்தான் தலைவராக இருக்கும் சிலாங்கூர் அரச மன்றம் இதன் தொடர்பில் புகார் அளித்துள்ளது என்று நேற்று இங்கு நடைபெற்ற“ மாநிலத் தேர்தல்- சிலாங்கூருக்கான போராட்டம்“ எனும் ஆய்வரங்கில் அமிருடின் தெரிவித்தார்.

ருக்குன் நெகாரா கோட்பாடுகளையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் அனைவரும் மதித்து நடக்க வேண்டும் என்றும் அமிருடின் வலியுறுத்தினார்.

இவ்விவகாரம் தொடர்பில் மன்னிப்பு கோரியபோது முகமது சனுசி உண்மைகளைத் திரித்துக் கூறி விட்டதாகவும் அவர் சொன்னார்.

கடந்த ஜூன் 19ஆம் தேதி மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்ட போது சுல்தான் ஷராபுடின் இட்ட உத்தரவுக்கு ஏற்ப முகமது சனுசிக்கு எதிராக சிலாங்கூர் அரச மன்றம் போலீசில் புகார் செய்தது.

மாநிலத் தேர்தலின் போது 3ஆர் (இனம், சமயம் மற்றும் ஆட்சியாளர்கள்)  விவகாரங்களை எழுப்பக் கூடாது என்று அரசியல்வாதிகளுக்கு சுல்தான் அப்போது நினைவுறுத்தியிருந்தார்.

பிரசாரத்தின் போது எல்லை மீறுவோர் சட்டப்படி அதற்கான விளைவுகளை எதிர்நோக்க வேண்டி வரும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.


Pengarang :