SELANGOR

சட்டவிரோத டீசல் விற்பனைக் கும்பல் முறியடிப்பு- வெ.300,000 எரிபொருள் பறிமுதல்

ஷா ஆலம், ஜூலை 20- மானிய விலை டீசலை சட்டவிரோதமான
முறையில் விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக
நம்பப்படும் கும்பலை உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின
அமைச்சின் சிலாங்கூர் மாநில பிரிவு வெற்றிகரமாக முறியடித்துள்ளது.

சுபாங் ஜெயா, கம்போங் கோல சுங்கை பாருவில் நேற்று
மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில் 343,417 வெள்ளி மதிப்புள்ள
டீசல் பறிமுதல் செய்யப்பட்டதாக அதன் இயக்குநர் முகமது ஜூஹைரி
மாட் ரெடேய் கூறினார்.

இந்த சோதனையில் 121,217 வெள்ளி மதிப்புள்ள 56,000 லிட்டர் டீசல்
மற்றும் சுமார் 222,200 வெள்ளி மதிப்பிலான மீட்டருடன் கூடிய எண்ணெய்
உறிஞ்சும் மூன்று சாதனங்கள், ரப்பர் குழாய் டேங்கர் லோரி
ஆகியவையும் கைப்பற்றப்பட்டன என்று அவர் சொன்னார்.

கடந்த இரு மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட உளவு நடவடிக்கையில்
சட்டவிரோதமாக டீசலை பதுக்கி வைக்கும் இடமாகச் செயல்பட்ட
பகுதிக்குள் அந்த லோரி அடிக்கடி சென்று வருவது கண்டறியப்பட்டது என
அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

அந்த சட்டவிரோத மையத்தை முற்றுகையிட்ட போது 50 வயது
மதிக்கத்தக்க லோரி ஓட்டுநர் உள்பட மூன்று மியன்மார் பிரஜைகள்
டீசலை நிரம்பும் பணியில் ஈடுபட்டிருந்தது கண்டறியப்பட்டது என்றார்
அவர்.

கைது செய்யப்பட்டவர்கள், லோரி ஓட்டுநர் மற்றும் அந்த வளாகத்தின்
உரிமையாளர் ஆகியோருக்கு எதிராக 1961ஆம் ஆண்டு விநியோகக்
கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்
சொன்னார்.


Pengarang :