SELANGOR

நாடு முழுவதும் குற்றச்செயல் குறியீடு வீழ்ச்சி- 64.8 விழுக்காட்டு புகார்களுக்குத் தீர்வு

கோலாலம்பூர், ஜூலை 20- இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் 25,482 குற்றச்செயல் குறியீடுகளில் 16,518க்குத்  தீர்வு காணப்பட்டுள்ளது.

குற்றச்செயல்களுக்குத் தீர்வு காண்பதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கான 45 விழுக்காட்டை விட இது அதிகமாகும் என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹூசேன் கூறினார்.

கடந்தாண்டு முதல் ஆறு மாதங்களில் குற்றச்செயல்களின் எண்ணிக்கை 25,774 ஆக இருந்த வேளையில் இவ்வாண்டின் அதே காலக்கட்டத்தில் அந்த எண்ணிக்கை 1.1 விழுக்காடு குறைந்துள்ளது என அவர் தெரிவித்தார்.

இவ்வாண்டு ஜனவரி 11 முதல் ஜூன் 30 வரை குற்றச் செயல் குறியீடு உள்ள மற்றும் குற்றச் செயல் குறியீடு அல்லாத 56,677 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டன. அவற்றில் 31,014 சம்பவங்கள் தொடர்பில்  குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.

நாம் பல்வேறு சவால்களைச் சந்தித்து 2023ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களைக் கடந்து இரண்டாவது ஆறு மாத காலத்தில் நுழைந்துள்ளோம். அரச மலேசிய போலீஸ் படையின் சாதனைகள் தொடரும் என்பதோடு மேலும் அதிக வெற்றிகளையும் குவிக்கும் என எதிர்பார்க்கிறேன் என்று அவர் சொன்னார்.

புக்கிட் அமான் குற்றப்புலானய்வுத் துறையின் ஏற்பாட்டில் இன்று இங்கு நடைபெற்ற அரச மலேசிய போலீஸ் படையின் 2023ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான ஒன்று கூடும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார்.

மாநிலத் தேர்தல் குறித்து விவரித்த அவர், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு, கெடா, கிளந்தான் திரங்கானு ஆகிய ஆறு மாநிலங்களில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் தேர்தலில் முழுமையானச் சேவையை வழங்க போலீஸ் படை தயாராக உள்ளது என குறிப்பிட்டார்.


Pengarang :