ECONOMYNATIONAL

அமைச்சர் சலாஹூடின் ஆயோப்பிற்கு வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது

கோலாலம்பூர், ஜூலை 22– மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோஸ்ரீ சலாஹூடின் ஆயோப்பிற்கு இன்று காலை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

அமானா கட்சியின் துணைத் தலைவருமான அவர், தற்போது மருத்துவமனையின் தீவிர கண்காணிப்பு பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளத் தகவலை அமைச்சரின் மெய்க்காப்பாளர் தம்மிடம் தெரிவித்ததாக அக்கட்சியின் உதவித் தலைவர் டத்தோ மாபுஸ் ஓமார் தெரிவித்தார்.

சலாஹூடின் இன்று அதிகாலை 3.30 மணியளவில் அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து அறுவை சிகிச்சை அறைக்கு கொண்டுச் செல்லப்பட்ட வேளையில் அவருக்கு அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது என்று மாபுஸ் சொன்னார்.

அந்த அறுவை சிகிச்சை எவ்வளவு நேரத்திற்கு நீடித்தது என்பது எனக்கு சரிவரத் தெரியவில்லை. அமைச்சருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக அவரின் மெய்க்காப்பாளர் காலை 8.00 மணியளவில் என்னிடம் தெரிவித்தார் என பெர்மாவிடம் அவர் கூறினார்.

நேற்றிரவு நாங்கள் இருவரும் சந்திக்கவிருந்தோம். எனினும் உடல் நலக் கோளாறு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முழுவதும் அவருக்கு அதிகமான நிகழ்ச்சிகள் இருந்தன. இதன் காரணமாக அவர் களைப்படைந்திருக்கலாம் என்றார் அவர்.

அமைச்சர் சலாஹூடினுக்கு மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதை மருத்துவ நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக அவரது பத்திரிக்கைச் செயலாளர் நுர் ஷியாகிரின் ஹூஸ்னுள் முன்னதாக தெரிவித்திருந்தார்.

கெடா, அலோர்ஸ்டார் சுல்தானா பாஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சலாஹூடினுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

டத்தோஸ்ரீ சலாஹூடின்  நலம் பெறுவதற்கு பிரார்த்தனை செய்த அனைத்துத் தரப்பினருக்கும் அவரின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துக் கொள்வதாக நுர் ஷியாகிரின் கூறினார்.

சலாஹூடினுக்கு நேற்றிரவு 10.15 மணியளவில் கடுமையான குமட்டல் மற்றும் வாந்தி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.


Pengarang :