SELANGOR

கோல சிலாங்கூரில் விளையாட்டு வசதிகள் உள்பட இளைஞர்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு முன்னுரிமை- தீபன் வாக்குறுதி

கோல சிலாங்கூர், ஜூலை 28- கோல சிலாங்கூர் தொகுதியில்
இளைஞர்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கான
நடவடிக்கைளை முன்னெடுக்கப்படும் என்று புக்கிட் மெலாவத்தி
தொகுதிக்கான பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் தீபன் சுப்பிரமணியம்
வாக்குறுதியளித்துள்ளார்.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில்
கோல சிலாங்கூர் வட்டார இளைஞர்கள் எதிர்நோக்கி வரும் வேலை
வாய்ப்பு, சமூக நலன், வர்த்தக வாய்ப்பு தொடர்பான பிரச்சனைகளுக்கும்
தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர்
குறிப்பிட்டார்.

கோல சிலாங்கூர் கெஅடிலான் இளைஞர் பிரிவினருடன் நேற்று நடத்திய
சந்திப்பின் போது கோல சிலாங்கூர் கெஅடிலான் தொகுதித்
தலைவருமான அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கோல சிலாங்கூர் வட்டாரத்தின் சில பகுதிகளில் இணைய சேவை
மிகவும் மந்தமாக இருப்பது தொடர்பாக முன்வைக்கப்பட்ட புகார்களை
தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சர் ஃபாஹ்மி பஃட்சிலின்
கவனத்திற்கு கொண்டுச் செல்லவுள்ளேன்.

மேலும் கோல சிலாங்கூர்விளையாட்டரங்கை சீரமைப்பது மற்றும் பத்தாங் பெர்ஜூந்தை பகுதியில் மினி அரங்கத்துடன் கூடிய விளையாட்டு மையத்தை உருவாக்குவது
தொடர்பில் பிரசாத்திற்காக இன்று கோல சிலாங்கூர் வரும் இளைஞர்
மற்றும் விளையாட்டுத் துறை துணையமைச்சர் ஆடாம் அட்லியிடம்
கோரிக்கை முன்வைக்கப்படும் என அவர் சொன்னார்.

இதுதவிர, பொது போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் எம்.ஆர்.டி.
இரயில் சேவையை கோல சிலாங்கூர் வரை விரிவாக்கம் செய்வதற்கான
முயற்சிகளும் முன்னெடுக்கப்படும் எனக் கூறி தீபன், கிராம தொழிலியல்

திட்டம், மீனவர்களுக்கான உதவித் திட்டம் ஆகியவை மீதும் கவனம்
செலுத்தப்படும் என்றார்.

இந்த சந்திப்பு நிகழ்வில் கோல சிலாங்கூர் கெஅடிலான் தொகுதி இளைஞர்
பிரிவைச் சேர்ந்த சுமார் 70 உறுப்பினர்கள் கலந்து கொண்டதாக
அப்பிரிவின் தலைவர் சிவபாலன் முகுந்தன் தெரிவித்தார்.

இந்த சந்திப்பு மிகவும் ஆக்கப்பூர்வமானதாக அமைந்தது. இந்த திட்டங்கள்
யாவும் செயல்வடிவம் காண்பதற்கு ஏதுவாக எதிர்வரும் மாநிலத் தேர்தலில்
தீபன் புக்கிட் மெலாவத்தி தொகுதியில் வெற்றியடைவதை உறுதி
செய்வதற்காக நாங்கள் முழு மூச்சாகப் பாடுபடவுள்ளோம் என அவர்
சொன்னார்.


Pengarang :