SELANGOR

ரஹ்மா விற்பனைத் திட்டத்தின் வழி 20 லட்சம் பேர் பயன்- வெ.5.1 கோடி வெள்ளி விற்பனை பதிவு

கோத்தா பாரு, ஜூலை 28- ரஹ்மா விற்பனைத் திட்டம் இவ்வாண்டு
தொடக்கத்தில் அமல்படுத்தப்பட்டது முதல் இதுவரை கிட்டத்தட்ட 20
லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்று உள்நாட்டு வர்த்தக மற்றும்
வாழ்க்கைச் செலவின துணையமைச்சர் பவுஸியா சாலே கூறினார்.

இக்காலக்கட்டத்தில் 1,133 மலிவு விற்பனைகள் நடத்தப்பட்ட வேளையில் 5
கோடியே 12 லட்சம் வெள்ளி மதிப்புள்ள விற்பனையும் பதிவு
செய்யப்பட்டது என்று அவர் சொன்னார்.

இந்த திட்டத்தில் விற்பனை செய்யப்படும் பல்வேறு பொருள்களுக்கு 30
விழுக்காடு வரை கழிவு வழங்கப்படுகிறது. இது தவிர நாடு முழுவதும் 331
நடமாடும் மலிவு விற்பனைகளும் நடத்தப்பட்டன. “மக்களைத் தேடி
கடைகள்“ எனும் கோட்பாட்டின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த
விற்பனையில் அத்தியாவசியப் பொருள்களுக்கு 10 முதல் 30 விழுக்காடு
வரை கழிவு வழங்கப்பட்டது என்றார் அவர்.

பாசீர் தும்போ, தாமான் டேசா டாருள் நாயிம் வீடமைப்பு பகுதியில் ரஹ்மா மலிவு விற்பனையை இன்று தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த திட்டத்தில் பங்கேற்றுள்ள எங்களின் விவேக பங்காளிகளின்
ஒத்துழைப்பு மிகவும் பெருமிதம் அளிக்கும் வகையில் உள்ளது. விற்பனை
செய்யப்படும் பொருள்களுக்கு கழிவு வழங்குவதில் அவர்கள் பெரிதும்
துணை புரிகின்றனர் என்று அவர் மேலும் சொன்னார்.


Pengarang :