ECONOMYPENDIDIKAN

மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியில் தேசிய நிலையிலான சதுரங்கத்தில் 824 மாணவர்கள்

ஷா ஆலம், ஜூலை 30- மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் தி ரெப்பிட் க்நைட் அகாடமி ஏற்பாட்டில் இம்மாதம் 22ஆம் தேதி மிட்லண்ட்ஸ் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற தேசிய நிலையிலான சதுரங்கப் போட்டியில் நாடு முழுவதும் உள்ள தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 824 மாணவர்கள் பங்கு கொண்டனர்.

சதுரங்கப் போட்டியில் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் ஆற்றலை வெளிக்கொணரும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த போட்டிக்கு பள்ளி மேலாளர் வாரியம், முன்னாள் மாணவர் சங்கம், மிட்லண்ட்ஸ் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், மிட்லண்ட்ஸ் கூட்டுறவுக் கழகம் ஆகிய தரப்பினரும் ஆதரவு வழங்கினர்.

இந்தப் போட்டியை பள்ளியின் மேலாளர் வாரியத் தலைவர் கே. உதயசூரியன் தொடக்கி வைத்தார். சதுரங்கப் போட்டியின் மீதான ஈடுபாட்டை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மத்தியில் அதிகரிப்பதை நோக்கமாக கொண்டு நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் சிலாங்கூர், பேராக், பினாங்கு, கெடா, நெகிரி செம்பிலான், மலாக்கா, பகாங், ஜோகூர். கூட்டரசு பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். தங்கள் பிள்ளைகளுக்கு உற்சாகமூட்டுவதற்காக 1,500க்கும் மேற்பட்ட பெற்றோர்களும் இந்நிகழ்வுக்கு வருகை தந்திருந்தனர்.

கடந்தாண்டு முதன் முறையாக இந்த போட்டி நடத்தப்பட்ட போது அதில் 520 மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் இவ்வாண்டில் அந்த எண்ணிக்கை 824 மாணவர்களாக அதிகரித்துள்ளது. இந்த போட்டி 8 வயதுக்கும் கீழ், 10 வயதுக்கும் கீழ், 12 வயதுக்கும் கீழ், 18 வயதுக்கும் கீழ் என நான்கு பிரிவுகளாக நடத்தப்பட்டது.

இப்போட்டியின் குழுப் பிரிவில் ஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளி முதல் இடத்தையும்  சுங்கை வாங்கி தமிழ்ப்பள்ளி இரண்டாம் இடத்தையும் ஃபிளெட்சர் தமிழ்ப்பள்ளி மூன்றாம்  இடத்தையும பிடித்தன.

தேசிய நிலையிலான இந்த சதுரங்கப் போட்டி ஆண்டுதோறும் மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியில் நடத்தப்படும் என்று பள்ளியின் மேலாளர் வாரியத் தலைவர் உதயசூரியன் கூறினார்.

இந்த போட்டிக்கு சிறப்பான முறையில் ஆதரவு வழங்கிய பள்ளிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் இளங்கோவன், வரும் ஆண்டுகளில் மேலும் அதிகமான பள்ளிகள் இப்போட்டியில் பங்கேற்கும் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.


Pengarang :