ECONOMYMEDIA STATEMENT

ஐந்தாண்டுகளில் 200,000 கட்டுபடி விலை வீடுகளை நிர்மாணிக்க மாநில அரசு இலக்கு

கோல லங்காட், ஜூலை 2- சிலாங்கூர் மாநிலத்தை ஆட்சி செய்வதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப் பட்டால் அடுத்த ஐந்தாண்டுகளில் 200,000 கட்டுபடி விலை வீடுகளை நிர்மாணிக்க பக்கத்தான் ஹராப்பான் அரசு திட்டமிட்டுள்ளது.

சிலாங்கூரில் கடந்த ஐந்தாண்டு கால பக்கத்தான் ஹராப்பான் ஆட்சியில் 171,000 கட்டுபடி விலை வீடுகள் நிர்மாணிக்கப் பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த தவணையில் மட்டும் நாம் 171,000 கட்டுபடி விலை வீடுகளை உருவாக்கியுள்ளோம். அவற்றில் 6,000 முதல் 7,000 வீடுகள் வரை முழுமையடைந்துள்ள நிலையில் எஞ்சிய வீடுகள் நிர்மாணிப்பில் உள்ளன என்று அவர் சொன்னார்.

மற்ற மாநிலங்களை காட்டிலும் நாம்தான் அதிகமான மலிவு விலை வீடுகளை நிர்மாணித்து வருவதாக ஊராட்சி மன்ற மேம்பாட்டு அமைச்சு கூறியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

அண்மையில் ஏற்பட்ட புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குவதற்காக இங்குள்ள கம்போங் மோரிப் சமூக மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் அமிருடின் இதனைத் தெரிவித்தார்.

பல்வேறு சவால்கள் நிலவினாலும் எதிர்வரும் காலங்களில் மேலும் அதிகமான கட்டுபடி விலை வீடுகளை நிர்மாணிக்க முடியும் என்பதை கடந்த கால அனுபவங்கள் உணர்த்துகின்றன என்று அவர் மேலும் சொன்னார்.

பேரிடர், கோவிட்-19 நோய்த் தொற்று மத்திய அரசின் நிலைத் தன்மையற்ற அரசியல் போன்ற பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் திட்டங்களை நம்மால் முழுமையாக அமல்படுத்த முடிந்தது என அவர் குறிப்பிட்டார்.

மாநில அரசு விவேகமான முறையில் செலவிடுவதன் காரணமாக மாநில அரசின் திட்டங்களை செவ்வனே நிறைவேற்ற முடிந்ததாகவும் அவர் கூறினார்.

மாநிலத்தில் பக்கத்தான் ஹராப்பான் மீண்டும் வெற்றி பெற்றால் 250,000 வெள்ளிக்கும் குறைவான விலையில் 200,000 வீடுகள் மாநில அரசு நிர்மாணிக்கும் என்றும் அமிருடின் வாக்குறுதியளித்தார்.


Pengarang :