SELANGOR

சிலாங்கூரில் 80 விழுக்காடு இந்தியர்கள் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு ஆதரவு- மந்திரி புசார் கூறுகிறார்

ஷா ஆலம், ஆக 4- சிலாங்கூர் மாநிலத்தில்  பக்கத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு இந்தியர்கள் வழங்கும் ஆதரவு 80 விழுக்காடாக உள்ளதாக மாநில பக்கத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

பக்கத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு இந்தியர்கள் வழங்கும் ஆதரவு ஊக்கமூட்டும் வகையில் இருந்தாலும் அந்த ஆதரவு 100 விழுக்காடு எட்டவில்லை என்று மாநில மந்திரி புசாருமான அவர் தெரிவித்தார்.

மாநில அரசு ஆற்றியுள்ள சேவைகளின் அடிப்படையில் அச்சமூகத்தின் ஆதரவு எண்ணிக்கை 80 விழுக்காடு அளவுக்கு உள்ளது. இருந்த போதிலும் இந்தியர்கள் வாக்களிப்பதற்கு வரவேண்டும் என்பதே தற்போதைக்கு மிகவும் முக்கியமானதாகும் என்றும் அவர்  சொன்னார்.

சிலாங்கூர் இந்திய ஆலோச மன்றத்தின் ஏற்பாட்டில் இங்குள்ள மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் நடைபெற்ற பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமைத்துவத்திற்கு  ஆதரவு தெரிவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில்  பொது மற்றும் அரசு சாரா அமைப்புகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக இந்த நிகழ்வில் உரையாற்றிய அமிருடின், மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மாணவர் தங்கும் விடுதியைப் பராமரிப்பதற்கு மாநில அரசு தொடர்ந்து நிதியுதவி வழங்கி வரும் என்றார்.

கடந்த 2018ஆம் ஆண்டு முதல் சிலாங்கூரிலுள்ள தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு ஆண்டுதோறும் 50 லட்சம் வெள்ளியை அரசாங்கம் மானியமாக வழங்கி வருகிறது. இது தவிர மிட்லண்ட்ஸ் தமிழ்ப் பள்ளி மாணவர் தங்கும் விடுதியின் பராமரிப்புக்கு கூடுதலாக 300,000 வெள்ளியை இவ்வாண்டில் அது வழங்கியுள்ளது. 200 மாணவர்கள் வரை தங்கி படிக்கும் வசதி கொண்ட இந்த விடுதியின் செயல்பாட்டிற்கு அரசு தொடர்ந்து மானியம் வழங்கி வரும் என்றார் அவர்.


Pengarang :