NATIONAL

கெடா மந்திரி புசார் மீண்டும் கைதா? புக்கிட் அமான் மறுப்பு

கோலாலம்பூர், ஆக 6 – கெடா மந்திரி புசார் டத்தோஸ்ரீ முகமது சனுசி முகமது நோர்
நேற்று கைது செய்யப்பட்டதாக அல்லது வாக்குமூலம் பதிவு செய்ய மீண்டும்
அழைக்கப்பட்டதாக இணையதளம் ஒன்றில் வெளிவந்த செய்தியைக் காவல்துறை
மறுத்துள்ளது.

அந்த இணைய ஊடகத்தில் குறிப்பிட்டதைப் போல் புக்கிட் அமான், கெடா மாநிலப்
போலீஸ் தலைமையகம் அல்லது கெடாவில் உள்ள மாவட்டப் போலீஸ் தலைமையகம்
ஆகியவற்றிலிருந்து யாரும் சனுசிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்று அரச மலேசியப் போலீஸ் படையின் வர்த்தக தொடர்புப் பிரிவுத் தலைவர் ஏசிபி ஏ. ஸ்கந்தகுரு கூறினார்.

ஆகவே, போலிச் செய்தியை வெளியிட்ட சம்பந்தப்பட்ட இணையதளம் மன்னிப்பு
கேட்க வேண்டும் என்பதோடு அந்தச் செய்தியை நீக்கவும் வேண்டும் என்று அவர்
வலியுறுத்தினார்.

போலி செய்திகள் பரவியது தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதற்கு ஏதுவாக இது
குறித்து காவல்துறையில் புகார் செய்யப்படும் என்று அவர் நேற்றிரவு அறிக்கை ஒன்றில்
தெரிவித்தார்.

இது போன்ற சரிபார்க்கப்படாத செய்திகளை குறிப்பாக, மாநிலத் தேர்தல்கள் நடைபெறும்
நடப்புச் சூழலில் வெளியிடுவது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் என்றும் அவர்
குறிப்பிட்டார்.

முன்னதாக, முகமது சனுசி மாலை போலீசாரால் கைது செய்யப்பட்டதாக உள்ளூர் செய்தி இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்து.

பாதுகாப்பு காரணங்களுக்காக சனுசி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை
என்று பாஸ் உறுப்பினர் என்று நம்பப்படும் ஒருவர் பாடாங் செராயில் நடைபெற்ற பிரசார
நிகழ்ச்சி ஒன்றில் கூறும் காணொளி நேற்று வெளியானது.


Pengarang :