SELANGOR

அரச அமைப்புக்கு எதிரான அரசியல்வாதிகளின் பண்பற்றச் செயல்- சிலாங்கூர் சுல்தான் வருத்தம்

கிள்ளான், ஆக 22- மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்றிருக்கிறோம் என்ற
நினைப்பில் அரசியல் ரீதியாக ஒருமித்த கருத்தைக் கொண்டிராதவர்களை
இழிவுபடுத்துவதோடு நிறுத்திக் கொள்ளாமல் சிலாங்கூர் வரை வந்து
எல்லை மீறிய வார்த்தைகளால் வசைபாடலாம் என எண்ணாதீர்கள்.

இந்த கடுமையான எச்சரிக்கையை மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான்
ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களின்
பதவியேற்புச் சடங்கிற்கு தலைமையேற்று உரை நிகழ்த்திய போது
விடுத்தார்.

தேர்தல் பிரசாரத்தின் போது ஆட்சியாளர்களைத் தொடர்பு படுத்தி அரசியல்
கட்சித் தலைவர்கள் உள்பட சமுதாயத்தின் ஒரு பிரிவினர்
வெளிப்படுத்திய கடுமையான மற்றும் பண்பற்ற வார்த்தைகள் சுட்டிக்காட்டி
சுல்தான் இந்த கருத்தை வெளியிட்டார்.

இந்த காட்டுமிராண்டித்தனமானச் செயல் வரம்பு மீறியதாகவும் இதுநாள்
வரை கட்டிக்காக்கப்பட்டு வரும் இஸ்லாம் மற்றும் மலாய்க்காரர்களின்
தனித்துவமிக்க மதிப்புக் கூறுகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும்
உள்ளதாக அவர் சொன்னார்.

அடுத்த மாநிலத்திற்கு அல்லது அடுத்தவர் வீட்டிற்குச் செல்லும் போது
மலாய்க்காரர்கள் பின்பற்றக்கூடிய பாரம்பரியம் மற்றும் உயரிய பண்பு
நெறிகளை தொடர்ந்து கடைபிடிக்க வேணடுமாய் அவர் கேட்டுக்
கொண்டார்.

எங்கே போனது மலாய்க்காரர்களின் நல்லொழுக்கம்? பொது மக்கள்
மத்தியில் பிறரை இழிவுபடுத்துவது நமது குறிப்பாக மலாய்க்காரர்களின்
பழக்கம் இல்லையே என அவர் மேலும் சொன்னார்.

சமுதாயத்தில் நல்லிணக்கத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பிறரை
வசைபாடும் கலாசாரத்தை நிறுத்திக் கொள்ளும்படி அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக் கொண்ட சுல்தான், மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் மேம்பாடுத்துவதில் கவனம் செலுத்தும்படி கேட்டுக் கொண்டார்.


Pengarang :