SELANGOR

பொருளாதாரத்தை மீட்டு மக்களின் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பைக் கட்டுப்படுத்துங்கள்- அரசுக்குச் சுல்தான் அறைகூவல்

ஷா ஆலம், ஆக 21- பொருளாதாரத்தை மீட்பதிலும் மக்களின் வாழ்க்கைச்
செலவின அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தும்படி மாநில
அரசுக்கு சிலாங்கூர் சுல்தான் அறைகூவல் விடுத்துள்ளார்.

தற்போதையச் சூழலில் மிகவும் சவால்மிக்கதாக விளங்கும் பொருளாதார
மந்த நிலையினால் மக்கள் மேலும் சிரமத்திற்குள்ளாவதைத் தடுக்க இந்த
விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று சுல்தான்
ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கூறினார்.

சிலாங்கூரில் குறிப்பாக, அடிப்படை வசதிகள் மற்றும் மேம்பாட்டு ரீதியாக
மக்கள் எதிர்நோக்கி வரும் சிரமங்களைக் களைவது மாநில அரசின்
முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும் என்பது தனது எதிர்பார்ப்பாகும்
என அவர் குறிப்பிட்டார்.

நேற்று இங்குள்ள இஸ்தானா ஆலம் ஷாவில் நடைபெற்ற மாநில
ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பதவியேற்புச் சடங்கிற்கு தலைமையேற்றப்
பின்னர் ஆற்றிய உரையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

துரித பொருளாதார வளர்ச்சி குறித்தும் பணக்கார மாநிலம் என்ற
அந்தஸ்து குறித்தும் பெருமிதம் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல்
மக்களின் தேவைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும் என அவர்
வலியுறுத்தினார்.

திட்டமிட்டப்பட்ட மேம்பாட்டுப் பணிகளின் வளர்ச்சியை நேரில் சென்று
ஆய்வு செய்வதன் மூலம் சிறப்பான சேவையை மாண்புமிகு
உறுப்பினர்கள் வழங்குவார்கள் என நான் பெரிதும் எதிர்பார்க்கிறேன்
என்றார் அவர்.


Pengarang :