ECONOMY

மாநில அரசின் மலிவு விற்பனை- செந்தோசா தொகுதியில் 15,000 பேர் பயன் பெற்றனர்

கிள்ளான், ஆக 23- செந்தோசா சட்டமன்றத் தொகுதியில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட ஜெலாஜா ஏசான் ரஹ்மா மலிவு விற்பனையின் வழி தொகுதியைச் சேர்ந்த 15,000க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை நடைபெற்ற மலிவு விற்பனைகளின் வழி இந்த எண்ணிக்கை பதிவானதாக ஏசான் ரஹ்மா விற்பனையின் தாமான் கிளாங் ஜெயா ஒருங்கிணைப்பாளர் எம். மகேந்திரன் கூறினார்.

தங்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் நோக்கில் மாநில அரசு ஏற்பாடு செய்த இந்த மலிவு விற்பனை குறித்து பொது மக்கள் பரவலாக மன நிறைவு தெரிவித்ததாக அவர் சொன்னார்.

இந்த மலிவு விற்பனைக்கு பொது மக்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்து வருகிறது. இந்த திட்டம் தொடரப்பட வேண்டும் என்பதோடு விற்பனைக்கு வைக்கப்படும் பொருள்களின் எண்ணிக்கையும் உயர்த்தப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

இன்றைய மலிவு விற்பனையில் சுமார் 400 பேர் கலந்து கொண்டதோடு இரண்டு மணி நேரத்தில் அனைத்துப் பொருள்களும் விற்றுத் தீர்ந்தன என்று கிள்ளான் நகராண்மைக் கழக உறுப்பினருமான அவர் சொன்னார்.

இன்று இங்கு 500 கோழிகள், 300 பாக்கெட் மீன், 300 தட்டு முட்டை, 300 பாக்கெட் மாட்டிறைச்சி, 200 பாக்கெட் அரிசி, 150 போத்தல் சமையல் எண்ணெய் ஆகியவற்றோடு மளிகைப் பொருள்களும் காய்கறிகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டன என்றார் அவர்.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் ஒரு தட்டு பி கிரேட் முட்டை 10.00 வெள்ளிக்கும்  ஒரு பாக்கெட் மாட்டிறைச்சி 10.00 வெள்ளிக்கும் கெம்போ மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.


Pengarang :