ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கிள்ளானில் தீபாவளி சந்தை- கடைகளுக்கு இன்று தொடங்கி விண்ணப்பிக்கலாம்

ஷா ஆலம், ஆக 23- இவ்வாண்டு தீபாவளி திருநாளை முன்னிட்டு கிள்ளான் நகராண்மைக் கழகம் கிள்ளான், லிட்டில் இந்தியா பகுதியில் தீபாவளி சந்தைக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இச்சந்தையில் வியாபாரம் செய்ய விரும்புவோர் இன்று தொடங்கி வரும் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி வரை இணையம் வாயிலாக கடைகளுக்கு விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தீபாவளி சந்தை லிட்டில் இந்தியா பகுதியிலுள்ள லோரோங் திங்காட் மற்றும் ஜாலான் தாலி ஆயரில் நடைபெறும் என்று கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் வர்த்தகத் தொடர்புப் பிரிவுத் தலைவர் நோர்பிஷா மாபிஷ் கூறினார்.

லோரோங் திங்காட்டில் 139 கடைகளுக்கும் ஜாலான் தாலி ஆயரில் 11 கடைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த கடைகளுக்கான விண்ணப்பங்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. லோரோங் திங்காட்டில் உள்ள கடை நடத்துநர்கள் மற்றும் 3பி வணிகர்கள் ஒரு பிரிவினராக  உள்ள வேளையில் மருதாணி இடுவோர் மற்றும் பலூன் விற்போருக்கு முதலில் வருவோருக்கு முதல் வாய்ப்பு என்ற அடிப்படையில் கடைகள் வழங்கப்படும். வாணவெடிகள், தீபாவளி பலகாரங்கள் உள்ளிட்ட பெருநாளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்வோர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர் என அவர் குறிப்பிட்டார். 

இந்த கடைகளுக்கான குலுக்கல் வரும் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி இணையம் வாயிலாக நடத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.

இந்த தீபாவளிச் சந்தையில் வியாபாரம் செய்வதற்கு அக்டோபர் 29 முதல் நவம்பர் 11 வரை (14 நாட்கள்) அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


Pengarang :