ECONOMYMEDIA STATEMENTNATIONAL

அசுத்தமான சூழலில் உணவுத் தயாரிப்பு- இரு தொழிற்சாலைகள் மூட எம்.பி.ஏ.ஜே. உத்தரவு

ஷா ஆலம், ஆக 27- தூய்மையின் அளவு 60 விழுக்காட்டிற்கும் குறைவாக இருந்த காரணத்தால் உணவு பதப்படுத்தும் இரு தொழிற்சாலைகளை இரு வாரங்களுக்கு மூட அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் உத்தரவிட்டது.

பாண்டான் மேவா மற்றும் பாண்டான் இண்டாவிலுள்ள அவ்விரு தொழிற்சாலைகளும் மிகவும் அசுத்தமான நிலையிலும் எலிகளின் கழிவுகளும் கரப்பான் பூச்சிகளும் நிறைந்தும் காணப்பட்டதாக நகராண்மைக் கழகத்தின் பொது உறவு மற்றும் செயலகப் பிரிவு கூறியது.

இது தவிர, உணவைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் உணவுக் கையாள்வது தொடர்பான சான்றிதழைக் கொண்டிருக்கவில்லை என்பதோடு டையாய்டு தடுப்பூசியும் பெறவில்லை. மேலும் அவர்கள் உரிய காலணி அணியாமலும் நீளமான நகங்களையும் கொண்டிருந்தனர் என்று அக்கழகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

உணவு பாதுகாப்புத் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் கடந்த 24ஆம் தேதி மூன்று உணவு தயாரிப்புத் தொழிற்சாலைகள் மீது இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தூய்மையின்றி காணப்பட்ட தொழிற்சாலைகளை உடனடியாக மூட 1983ஆம் ஆண்டு உணவுச் சட்டத்தின் 11வது பிரிவின் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் அது குறிப்பிட்டது.

இந்த சோதனை நடவடிக்கையில் அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம், சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை மற்றும் உலு லங்காட் மாவட்ட சுகாதார இலாகாவைச் சேர்ந்த 30 அதிகாரிகள் பங்கு கொண்டனர் என்றும் அவ்வறிக்கை கூறியது


Pengarang :