கிள்ளான் நகராண்மைக் கழகப் பகுதியிலுள்ள 46,994 சொத்து உரிமையாளர்கள் மதிப்பீட்டு வரியைச் செலுத்தவில்லை

கிள்ளான், ஆக 30- இவ்வாண்டு ஜூன் மாதம் வரை மதிப்பீட்டு வரியைச் செலுத்தாத 49,994 சொத்து உரிமையாளர்களை கிள்ளான் நகராண்மைக் கழகம் (எம்.பி.கே.) அடையாளம் கண்டுள்ளது.

தங்கள் சொத்துகள் பறிமுதல் செய்யப்படுவதை தவிர்ப்பதற்கு ஏதுவாக மதிப்பீட்டு வரியை விரைந்து செலுத்துமாறு சொத்து உரிமையாளர்களை நகராண்மைக் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.

மதிப்பீட்டு வரியைச் செலுத்துவதில் மக்கள் அக்கறையுடன் இருப்பதை உறுதி செய்வதற்கும் வரியை வசூலிக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்துவதற்கும் சிறப்புக் குழு ஒன்றை நகராண்மைக் கழகம் அமைத்துள்ளதாக அதன் சட்டப் பிரிவுத் துணை இயக்குநர் முகமது அஸ்லான் அப்துல் மாலிக் கூறினார்.

முகப்பிடங்களில் பணிகளை மேற்கொள்வதில் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை நாங்கள் உணர்ந்துள்ளோம். ஆகவே, மதிப்பீட்டு வரியை செலுத்துவதை எளிதாக்கும் வகையில் இணையச் சேவையை நாங்கள் தொடக்கியுள்ளோம் என்று அவர் குறிப்பிட்டார்.

பொது மக்கள் நகராண்மைக் கழக முகப்பிடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்து எளிதான முறையில் வரியை செலுத்துவதற்காக ஜோம்பேய் மற்றும் ஐபேய் தளங்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம் என்று நேற்று இங்கு  மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கைக்குப் பின்னர்  செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

முன்னதாக அவர், கடந்த எட்டு ஆண்டுகளாக 21,000 வெள்ளி மதிப்பீட்டு வரியைச் செலுத்தாமலிருந்த 24 மணி நேர உணவகம் ஒன்றுக்கு சீல் வைக்கும் நடவடிக்கைக்கு தலைமை தாங்கினார்.


Pengarang :