ECONOMYMEDIA STATEMENTSELANGOR

புதிய ஆட்சிக்குழு உறுப்பினரின் தலைமையில் “சித்தம்“ மேலும் சிறப்புடன் செயல்படும்- நிர்வாகி கென்னத் நம்பிக்கை

ஷா ஆலம், ஆக 30- வசதி குறைந்த இந்திய சமூகத்தினருக்கு குறுகிய கால தொழில் பயிற்சிகளையும் வர்த்தக உபகரணங்களையும் வழங்கி அவர்களின் வருமானத்தைப் பெருக்குவதை நோக்கமாக கொண்ட சிலாங்கூர் இந்திய தொழில் ஆர்வலர் மையம் (சித்தம்) இந்த புதிய தவணையில் மேலும் சிறப்புடன் செயல்பட உறுதி பூண்டுள்ளது.

தொழில்முனைவோர் ஆட்சிக்குழுவுக்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள நஜ்வான் ஹலிமி தலைமையில் இந்த சித்தம் அமைப்பு நடப்புத் திட்டங்களோடு புதியத் திட்டங்களையும் அறிமுகப்படுத்தும் என்று அந்த அமைப்பின் நிர்வாகி எஸ். கென்னத் சேம் கூறினார்.

கடந்த ஐந்தாண்டுகளாக தொழில்முனைவோர் துறைக்கு பொறுப்பேற்றிருந்த ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் தலைமையில் இந்த அமைப்பு பல்வேறு தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சிகளையும் வர்த்தக உபகரணத் திட்டங்களையும் மேற்கொண்டு வந்தது.

சித்தம் வாயிலாக கடந்த 2019ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டு வரும் நான்கு தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டங்களின் வாயிலாக குறைந்த வருமானம் பெறும் தரப்பைச் சேர்ந்த சுமார் எட்டாயிரம் பேர் இதுவரைப் பயனடைந்துள்ளனர். 

இந்த தவணை காலத்தில் இத்திட்டங்களை மேலும் தரம் உயர்த்தி அதிகமான இந்தியர்கள் குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் தரப்பினர் பயன்பெறுவதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தவிருக்கிறோம் கென்னத் சொன்னார்.

சித்தம் அமைப்பிற்கு இவ்வாண்டு தொடக்கத்தில்  முதல் கட்டமாக வழங்கப்பட்ட 500,000 வெள்ளி பல்வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்ட வேளையில் இரண்டாம் கட்டமாக வழங்கப்படும 500,000 வெள்ளி நிதியைக் கொண்டு அடுத்த ஆறு மாதங்களுக்கு திட்டங்களை அமல்படுத்தவிருக்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

சித்தம் அமைப்பு அமல்படுத்தியுள்ள நான்கு முன்னெடுப்புகளில் தொழில் முனைவோர் பயிற்சித் திட்டமும் ஒன்றாக விளங்குகிறது. இத்திட்ட பங்கேற்பாளர்களுக்கு வர்த்தகத்தை விரிவாக்கும் நுணுக்கங்கள், ஹாலால் சான்றிதழ் பெறும் வழிமுறைகள் மற்றும் டிக் டாக் போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாக வர்த்தகத்தை விளம்பரப்படுத்தும் வழிமுறைகள் குறித்து பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இரண்டாவது திட்டமாக விளங்கும் திறன் மற்றும் உற்பத்தி பயிற்சியின் வழி மகளிருக்கு சமையல் கலை, முக ஒப்பனை, மருதாணி இடுவது, மாலை தொடுப்பது உள்ளிட்ட கைத்தொழில்கள் கற்றுத் தரப்படுகின்றன. 

இந்திய இளைஞர்கள் பிரசித்தி பெற்ற நிறுவனங்களில் இணைந்து அத்துறை சார்ந்த நுணுக்கங்களைக் கற்று உபரி வருமானம் பெறுவதற்கு ஏதுவாக க்ரோ எனும் வர்த்தக வழிகாட்டிப் பயிற்சித் திட்டத்தையும் சித்தம் நடத்தி வருகிறது.

வர்த்தக உபகரணங்களைத் இலவசமாக வழங்குவதை நோக்கமாகக் கொண்ட நான்காவது திட்டம் தற்போது மறுசீரமைப்பு செய்யப்பட்டு வசதி குறைந்தவர்களுக்கு அங்காடிக் கடைகள் அமைத்து அவர்களுக்கு வர்த்தக உபகரணங்களும் ஊராட்சி மன்ற லைசென்ஸ்களும் பெற்றுத் தருவதற்குரிய ஏற்பாடு செய்யப்படுகிறது.


Pengarang :