மித்ரா நிதி மக்களுக்கு முழுமையாகச் செலவிடப்படும்- ஒரு வெள்ளிகூட திரும்ப அனுப்பப்படாது- ரமணன் திட்டவட்டம்

கோலாலம்பூர், செப் 1- மித்ரா எனப்படும் மலேசிய இந்திய சமூக உருமாற்ற பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு வெள்ளிகூட பிரதமர் துறையிடம் திருப்பி ஒப்படைக்கப் படாது என்று அதன் சிறப்பு நடவடிக்கை குழு தலைவர் டத்தோ ஆர். ரமணன்  கூறினார்.

அந்தப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ஒவ்வொரு வெள்ளியும் நாட்டிலுள்ள இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்குப் பயன்படுத்தப்படுவது உறுதி செய்யப்படும் என்று அவர் உறுதிப்படத் தெரிவித்தார்.

மித்ரா நிதி முழுமையாக செலவிடப்படாவிட்டால் அது பிரதமர் துறைக்கு திருப்பி அனுப்பப்படும். கடந்த 16 ஆண்டுகள் தொடர்ச்சியாக அந்நிதி திருப்பி அனுப்பப்பட்டு வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இன்று இங்கு இவ்வாண்டிற்கான மித்ரா திட்டங்களின் ஆகக்கடைசி நிலவரங்கள் குறித்து விளக்குவதற்காக நடத்தப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்திய சமுதாய மேம்பாட்டிற்காக ஒவ்வொரு ஆண்டும் மித்ராவுக்கு 100 மில்லியன் வெள்ளி ஒதுக்கப்படுகிறது.

அவ்வகையில் இவ்வாண்டு ஒதுக்கப்பட்ட நிதியின் வாயிலாக பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு  வருகிறது என்று  சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.

இதில் அரசு, தனியார் உயர் கல்வி மாணவர்களுக்காக உதவித் தொகை திட்டத்திற்கு இதுவரை 8,583 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளது. முதல் கட்டமாக 2,492 பேருக்கு தலா 2 ஆயிரம் வெள்ளி வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள மாணவர்களுக்கு விரைவில் அவ்வுதவி நிதி ஒப்படைக்கப்படும்.

மொத்தம் 10 ஆயிரம்  மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு உள்ளது. ஆகவே வரும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் இதற்கு மாணவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

பாலர் பள்ளிகளுக்கான உதவித் திட்டத்தில் 2,993 மாணவர்களை  உள்ளடக்கிய 107 பாலர் பள்ளிகளுக்கு 7,183,200 ரிங்கிட் செலுத்தப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 38 பாலர்பள்ளிகளுக்கும் பணம் விரைவில் செலுத்தப்படும்.

சிறுநீரக சுத்தரிகரிப்புக்கான உதவித் திட்டத்திற்கு 135 மையங்களில் இருந்து 749 நோயாளிகளும் தனிப்பட்ட முறையில் இருந்து 813 பேரிடம் இருந்தும் விண்ணப்பம் கிடைத்துள்ளது. இந்த திட்டத்திற்கு  8,640 மில்லியன் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான 1 லட்சம் வெள்ளி திட்டத்தில் 36 தொகுதிகளுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது. இதே போன்று 525 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக மடிக் கணினி திட்டத்திற்காகவும் கூகுள் நிறுவனத்துடன் இன்று ஒப்பந்த உடன்படிக்கை கையெழுத்தாகியுள்ளது.

குறிப்பாக 30 மில்லியன் வெள்ளி அடங்கிய மித்ரா மானியத் திட்டத்திற்கான பரிசீலனைகளும் முறையாக நடைபெற்று வருகிறது.

ஆக மொத்தத்தில் மித்ராவுக்கு ஒதுக்கப்பட்ட 100 மில்லியனில் 28 மில்லியன் வெள்ளி செலவு செய்யப்பட்டுள்ளது.89.8 மில்லியன் வெள்ளிக்கான திட்டங்களும் வரிசையாக உள்ளது.

ஆக மொத்தத்தில் இந்த 100 மில்லியன் வெள்ளி முறையாக செலவு செய்யப்படும். அதில் இருந்து 1 வெள்ளிகூட கூட அரசுக்கு திருப்பி செலுத்தப்படாது. இதில் நான் உறுதியாக உள்ளேன் என்று டத்தோ ரமணன் கூறினார்.


Pengarang :