ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஃபுட்சால் போட்டியின்போது நடுவரை தாக்கிய ஆட்டக்காரர் அடையாளம் காணப்பட்டார்

கோலாலம்பூர், செப் 4-  கடந்த செவ்வாய்க்கிழமை பெட்டாலிங் ஜெயா, ஜாலான் பிஜேயு 1ஏ/4 ஆரா டாமன்சாராவிலுள்ள   விளையாட்டு வளாகத்தில் ஃபுட்சால் போட்டிக்கு நடுவராக இருந்தவரைத் தாக்கியதாக சந்தேகிக்கப்படும் நபரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

இருபது வயதுக்கு உட்பட்ட அந்த நபர்  விரைவில் விசாரணைக்கு உதவ அழைக்கப்படுவார் என்று பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி முகமது ஃபக்ருடின் அப்துல் ஹமீது கூறினார்,  வேண்டுமென்றே காயத்தை ஏற்படுத்தியது தொடர்பில் இந்த சம்பவம் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 323 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது. இப்பிரிவின் கீழ் குற்றவாளி என நிரூபிக்க படுவோருக்கு ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது 2,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

பாதிக்கப்பட்ட  40 வயது நபர் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு 12.12 மணியளவில் காவல்துறையில் புகார் அளித்ததாக அவர் முன்னதாக கூறியிருந்தார்.

இந்த தாக்குதல் சம்பவத்தைக் சித்தரிக்கும் 13 வினாடி காணொளி பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் கவனத்திற்கு வந்துள்ளதாகவும் ஃபக்ருடின் குறிப்பிட்டார்.

ஆட்டத்தின் போது முரட்டுத்தனமாக நடந்து கொண்ட கோல் காவலருக்கு நடுவர் சிவப்பு அட்டையைக் காட்டுவதையும் திடலின் வெளியே இருந்த விளையாட்டாளர் திடீரென உள்ளே வந்து நடுவரைத் தாக்குவதையும் அந்த காணொளி சித்தரிக்கிறது.


Pengarang :