SELANGOR

ஏஹ்சான் ரஹ்மா திட்டத்தில் அரிசி விற்பனை அதிகரிக்கப்படும்- பி.கே.பி.எஸ். தகவல்

அம்பாங் ஜெயா, செப் 25- பொது மக்களின் தேவையை ஈடுசெய்வதற்காக
ஜெலாஜா ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனைகளில் 5 கிலோ அரிசி
பாக்கெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க சிலாங்கூர் மாநில விவசாய
மேம்பாட்டுக் கழகம் ( பி.கே.பி.எஸ்.) நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

ஏஹ்சான் என்ற முத்திரையைக் கொண்ட அந்த அரிசியின் விற்பனை
அளவை அதிகரிப்பதன் மூலம் அந்த உணவுப் பொருளின்
விலையேற்றத்தால் பொதுமக்கள் எதிர்நோக்கியிருக்கும் சுமையைக்
குறைக்க முடியும் என்று பி.கே.பி.எஸ். விற்பனைப் பிரிவின் மேலாளர்
முகமது ஃபாரிட் முஸ்தாபா கூறினார்.

அரிசியின் விற்பனை அளவை பி.கே.பி.எஸ். கட்டங் கட்டமாக
அதிகரிக்கவுள்ளது. லெம்பா ஜெயா தொகுதிக்கான மலிவு விற்பனையில்
290 பாக்கெட் 5 கிலோ அரிசியை தலா 13.00 வெள்ளி விலையில் அது
விற்பனை செய்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

வழக்கமாக நாங்கள் 200 பாக்கெட் அரிசியை ஒவ்வொரு இடத்திலும்
விற்பனைக்கு வைப்போம். இந்த வாரம் அந்த எண்ணிக்கையை 400 ஆக
அதிகரிக்கவுள்ளோம் என்றார் அவர்.

இன்று இங்குள்ள அம்பாங் வாட்டார்ஃப்ராண்ட் லாமான் நியாகாவில்
நடைபெற்ற லெம்பா ஜெயா தொகுதி நிலையிலான மலிவு
விற்பனையின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை தொடங்கி 5 கிலோ அரிசியின் விலை 13.00
வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், ஒருவருக்கு ஒரு
பாக்கெட் என விற்பனை கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாகச் சொன்னார்.

சந்தையில் 5 கிலோ அரிசியின் விலை வெ.17.70 ஆகும். உள்நாட்டு
வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு வெ.5.70 உதவித்

தொகையை வழங்குகிறது. ஆகவே நாங்கள் 13.00 வெள்ளிக்கு விற்பனை
செய்கிறோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :