NATIONAL

லஞ்சம் கொடுத்த புகாரில் 2019 முதல் 240 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

கோலாலம்பூர், செப் 25- லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த
2019ஆம் ஆண்டு முதல் 240 பேர் மீது 2009ஆம் ஆண்டு மலேசிய ஊழல்
தடுப்பு ஆணையச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில்
குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அவர்களில் 29 பேர் மீது அந்த சட்டத்தின் 16(பி) பிரிவின் கீழும் 211 பேர்
மீது 17(பி) பிரிவின் கீழும் குற்றஞ்சாட்டப்பட்டதாகப் பிரதமர் துறை (சட்ட,
மற்றும் நிர்வாக சீர்திருத்தம்) துணையமைச்சர் ராம் கர்ப்பால் சிங்
மேலவையில் இன்று கூறினார்.

குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் 86 பேர் லஞ்சம் வழங்கியது அவ்விரு
பிரிவுகளின் கீழ் உறுதி செய்யப்பட்டது என்று 12வது மலேசியத்
திட்டத்தின் மத்தியத் தவணைக்கான மறுஆய்வு மீதான விவாதத்தை
முடித்து வைத்து உரையாற்றுகையில் அவர் தெரிவித்தார்.

இந்த வழக்குகளின் நடைமுறைப்படி லஞ்சம் பெற்றவர் மற்றும்
கொடுத்தவரில் ஒருவர் மட்டுமே குற்றஞ்சாட்டப்படுகிறார். இத்தகைய
வழக்கு விசாரணைகளில் சாட்சியமளிப்பதற்கும் ஆதாரங்களை
வழங்குவதற்கும் அவ்விரு தரப்பினரையும் தவிர்த்து மூன்றாவதாக ஒரு
தரப்பு வருவது கிடையாது என அவர் தெளிவுபடுத்தினார்.

சாட்சியமளிப்பதற்கும் ஆதாரங்களை வழங்குவதற்கும் மூன்றாவது தரப்பு
இருக்கும் பட்சத்தில் லஞ்சம் பெற்றவர், கொடுத்தவர் மற்றும் இடைத்தரகர்
ஆகிய மூவர் மீது குற்றஞ்சாட்ட முடியும் என அவர் மேலும் சொன்னார்.


Pengarang :