SELANGOR

பணி ஓய்வு வயதை 65ஆக உயர்த்தும் திட்டம் இல்லை- பொதுச் சேவைத் துறை கூறுகிறது

ஷா ஆலம், செப் 27- அரசாங்க ஊழியர்களின் குறைந்த பட்ச பணி ஓய்வு
வயதை 65ஆக உயர்த்தும் திட்டத்தை அரசாங்கம் தற்போதைக்கு
கொண்டிருக்கவில்லை என்று பொதுச் சேவைத் துறையின் நடவடிக்கை
பிரிவு தலைமை இயக்குநர் டத்தோ அனிஸி இப்ராஹிம் கூறினார்.

இந்த விவகாரத்தை கூட்டரசு நிர்வாகம் எழுப்பவில்லை என்பதோடு இநத
ஆலோசனைக்கு பொதுச்சேவைத் துறையைச் சேர்ந்த பெரும்பாலோர்
உடன்படவில்லை என்று நேற்று இங்கு நடைபெற்ற பொதுச் சேவைத்
துறையின் கலந்தாய்வு நிகழ்வின் போது அவர் குறிப்பிட்டார்.

“உங்களில் யாரும் 65 வயது வரை வேலை செய்ய விரும்புகிறீர்களா?“ என
கூட்டத்தினரை நோக்கி அவர் கேள்வியெழுப்பிய போது, ஆயிரத்திற்கும்
மேற்பட்ட அரசு ஊழியர்கள் நிரம்பியிருந்த கூட்டத்தில் பலத்த சிரிப்பொலி
எழுந்தது.

இந்த ஆலோசனையை பெரும்பாலான அரசு ஊழியர்கள் ஏற்கவில்லை
என்பதோடு அரசாங்கமும் இது குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை
என்று அவர் தெரிவித்தார்.

பொதுச் சேவைத் துறை ஊழியர்களின் சம்பள விகிதத்தை மறு ஆய்வு
செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சிலாங்கூர் மாநில அரசு
ஊழியர்களுடன் இந்த கலந்தாய்வு நடத்தப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

நடப்பு சமூக பொருளாதார சவால்கள் மற்றும் அரசாங்கத்தின் நிதி
நிலைமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு புதிய சம்பள விகிதம்
தொடர்பான கட்டமைப்பின் ஆகக் கடைசி தரவுகளை பெறுவதற்காக
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஆலோனையின் பேரில்
இத்தகைய கலந்தாய்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த கலந்தாய்வில் பங்கேற்ற பெரும்பாலான அரசு ஊழியர்கள் சமூக
நலன், பணி, ஊதியம் மற்றும் சேவை கட்டமைப்பு தொடர்பான
கேள்விகளை முன்வைத்தனர்.


Pengarang :