NATIONAL

காணாமல் போன இந்தியப் பிரஜையின் காலடித்தடம் கண்டுபிடிப்பு

ஈப்போ, செப் 29- இம்மாதம் 22 ஆம் கேமரன் ஹைலண்ட்ஸ்,  குனோங் ஜாசார் என்ற இடத்தில் நடைபயணம் மேற்கொண்டபோது காணாமல் போன இந்தியாவைச் சேர்ந்த சுற்றுப் பயணியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள மீட்புக்குழு  அவ்வாடவரின் காலடித் தடங்களைக் கண்டறிந்துள்ளது.

 காவல்துறை மற்றும் பொது தற்காப்புப் படை உறுப்பினர்களைக் கொண்ட அந்த மீட்புக் குழு சுங்கை உ பி பகுதியில் அந்த காலடித் தடங்களைக் கண்டுபிடித்ததாகக்  
பகாங் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை பொது உறவு  அதிகாரி ஜுல் பட்லி 
ஜக்காரியா  கூறினார்.

நேற்றைய  தேடுதல் நடவடிக்கை குனோங் ஜாசார் மற்றும் கம்பார் கணவாய்  
தொடங்கி பாரத் தேயிலை தோட்டத்திற்கு செல்லும் பாதையின் ஐந்து கிலோமீட்டர் 
சுற்றளவில்  மையமிட்டு இருந்தது  என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

 இந்த தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில்  70 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கு கொண்டனர்.  இது நேற்று பின்னேரம் இந்நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டு, இன்று மீண்டும் தொடங்கியது.  குனோங் ஜாசார் உச்சியில் இருந்து 500 மீட்டர் தொலைவில் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில்  இன்று கவனம் செலுத்தப்படும் என்றார் 
அவர்.

இம்மாதம்  22 ஆம் தேதி  கேமரன் ஹைலண்ட்ஸ், தானா ராத்தா, ஜாசார்  மலையில் ஏறும் முயற்சியில் ஈடுபட்ட இந்திய சுற்றுலாப் பயணி ஒருவர் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது.

44 வயதான நந்தன் சுரேஷ் நட்கர்னி என்ற அந்த நபர்  தானா ராத்தா, ஹைக்கர்ஸ் ஸ்லீப் போர்ட் கெஸ்ட் ஹவுஸ்சில் நுழைவதற்கு கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி  பதிவு செய்ததாகவும் செப்டம்பர் 24 அன்று அங்கிருந்து வெளியேறி இருக்க  வேண்டும் 
என்றும் கேமரன் ஹைலண்ட்ஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர் டிஎஸ்பி அஸ்ரி ராம்லி தெரிவித்தார். 

இம்மாதம் 22 ஆம் தேதி முதல்  தனது வாடிக்கையாளர் ஒருவர்  காணப்படாதது தொடர்பில் ஹோட்டல் நிர்வாகியிடமிருந்து கடந்த 22ஆம் தேதி தாங்கள் புகாரைப் பெற்றதாக அவர் சொன்னார். 

ஹோட்டலில் உள்ள கண்காணிப்பு  கேமராவை (சிசிடிவி) பரிசோதனை செய்தபோது  சம்பந்தப்பட்ட நபர் கடந்த  செப்டம்பர் 22 ஆம் தேதி காலை 9.00 மணிக்கு ஹோட்டலை விட்டு வெளியேறியதும் செப்டம்பர் 24 வரை அவர் ஹோட்டலுக்கு திரும்பாததும் 
கண்டறியப்பட்டது.

தானா ராத்தா,  ஜாசார் மலையின் 10வது பாதையில் ஏறும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அவ்வாடவர் கடந்த 22ஆம் தேதி தனியாகச் சென்றது தானா ராத்தா பகுதியில் பெறப்பட்ட சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிவந்துள்ளது என்றார் அவர். 

தொடர் நடவடிக்கையாகக் காவல்துறையினர்  சம்பவ இடக் கட்டுப்பாட்டு மையத்தை  
அமைத்து தேடுதல் மற்றும் மீட்பு (எஸ்.ஏ.ஆர்.) நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர் 
என்றும் இந்த தேடுதல் நடவடிக்கையில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, பொது 
தற்காப்பு பிரிவு மற்றும் அரசு சாரா அமைப்புகளும் பங்கேற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக எந்தவிதமான ஊகங்களையும் வெளியிட வேண்டாம் என்றும் அவர் பொது மக்களுக்கு ஆலோசனை கூறினார்.

Pengarang :