SELANGOR

குப்பை எரிப்பு மையத் திட்டம்- பொதுமக்களின் கருத்துகளை மாநில அரசு கவனத்தில் கொள்ளும்

கோம்பாக், அக் 2- இங்குள்ள பண்டார் தாசேக் புத்ரியில் குப்பை எரிப்பு
மையத்தை (இன்சினேரேட்டர்) நிர்வமாணிக்கும் திட்டம் தொடர்பில் பொது
மக்களின் கருத்துகளைப் பெற மாநில அரசு தயாராக உள்ளது.

இந்த திட்டம் சுற்றுச் சூழலுக்கும் மக்களின் சுகாதாரத்திற்கும் பாதிப்பை
ஏற்படுத்தும் என்ற வட்டார குடியிருப்பாளர்களின் அச்சத்தை தாங்கள்
கவனத்தில் கொண்டுள்ளதாக ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய்
கியாட் கூறினார்.

பொது மக்களின் ஆதங்கத்தையும் கவலையையும் நாங்கள் கருத்தில்
கொண்டுள்ளோம். உயர் தொழில்நுட்பத்தைக் கொண்டு இந்த குப்பை எரிப்பு
மையம் கட்டப்படுகிறது என்பதை நான் அறிவேன். ஆனால் மக்களுக்கு
இது குறித்து தெரியாமலோ அல்லது புரியாமலோ இருக்கலாம் என அவர்
தெரிவித்தார்.

இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான சரியான வழி திட்ட
மேம்பாட்டாளருக்கும் பொது மக்களுக்கும் இடையே கலந்துரையாடல்
நடத்துவதுதான். மக்களின் கருத்துகளைக் கேட்டறிய மாநில அரசு
எப்போதும் தயாராக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக அவர், இன்சினேரேட்டர் எதிர்ப்பு ரவாங் ஒருங்கமைப்பின்
ஏற்பாட்டில் டத்தாரான் பத்து ஆராங்கில் நடைபெற்ற வட்டார
மக்களுடனான கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டார்.

அந்த குப்பை எரிப்பு மையம் குடியிருப்புகளுக்கு மிக அருகில்
அமைக்கவிருப்பதால் அதனைத் தாங்கள் எதிர்ப்பதாக அந்த அமைப்பின்
ஒருங்கிணைப்பாளர் டாக்டர் லாம் சூங் வா கூறினார்.

இந்த திட்டத்திற்கு மாற்றாக மறுசுழற்சி மறு பயனீடு மற்றும் நெகிழிப்
பைகளுக்கான தடை போன்ற குப்பைகள் இல்லாத மேலாண்மை திட்டத்தை மாநில அரசு அமல்படுத்தலாம் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.


Pengarang :