NATIONAL

ஓடும் பஸ்ஸில் தீ- எட்டுப் பயணிகள் தெய்வாதீனமாக உயிர்த்தப்பினர்

பெட்டாலிங் ஜெயா, அக் 2- சாலையில் சென்று கொண்டிருந்த
ரெப்பிட்கேஎல் பஸ்ஸில் திடீரென தீப்பற்றியதில் அதில் பயணம் செய்த
எட்டு பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். இச்சம்பவம் நேற்று
காலை இங்குள்ள ஜாலான் தண்டாங்கில் நிகழ்ந்தது.

இந்த தீவிபத்து குறித்து நேற்று காலை 11.17 மணியளவில் தங்களுக்கு
புகார் கிடைத்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத்
துறையின் இயக்குநர் வான் முகமது ரசாலி வான் இஸ்மாயில் கூறினார்.
ஜாலான் பெஞ்சாலா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஐந்து
தீயணைப்பு வீரர்களைக் கொண்ட குழு உடனடியாகச் சம்பவ இடத்திற்கு
விரைந்தாக அவர் சொன்னார்.

சம்பவ இடத்தை அடைந்த போது தீப்பற்றிய பஸ்சை அதன் ஓட்டுநர்
சாலையோரம் நிறுத்தி அதிலிருந்த பயணிகளை இறக்கி விட்டிருந்தார்.
நாங்கள் துரிதமாகச் செயல்பட்டு பத்து நிமிங்களில் தீயைக்
கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தோம். இச்சம்பவத்தில் அந்த பஸ்சின் 90
விழுக்காட்டு பகுதி தீயில் அழிந்தது என்று ஜாலான் பெஞ்சாலா
தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் நடவடிக்கை அதிகாரி சம்சுல்
இஸ்மாயில் கூறினார்.

அந்த பஸ்சில் பயணித்துக் கொண்டிருந்த போது அதன் பின்புறம் இருந்த
இயந்திரத்திலிருந்து தீப்பொறி கிளம்பியதாகவும் அது குறித்து தாம் உடனே
ஓட்டுநரிடம் தகவல் தெரிவித்ததாகவும் பயணிகளில் ஒருவர்
தெரிவித்தார்.

அந்த பஸ்சில் ஏற்பட்ட தீக்கான காரணத்தைக் கண்டறியும் பணியில்
போலீசார், ரெப்பிட்கேஎல் பணியாளர்கள் மற்றும் தெனாகா நேஷனல்
அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.


Pengarang :