ANTARABANGSA

துருக்கியில் குண்டு வெடிப்பு- மலேசியா கண்டனம்

புத்ராஜெயா, அக் 2 -  துருக்கியின் அங்காராவில் நேற்று இரண்டு போலீஸ் 
அதிகாரிகள் காயமடைந்ததற்கு காரணமான தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு 
மலேசியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சட்டபூர்வமான அரசியல் செயல்முறையை சீர்குலைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்டும் எந்த வன்முறைச் செயல்களையும் நிராகரிப்பதில் மலேசியா துருக்கிய அரசாங்கம் 
மற்றும் சர்வதேச சமூகத்துடன் ஒற்றிணைந்து நிற்கிறது என்று வெளியுறவு அமைச்சு (விஸ்மா புத்ரா) இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு நேரப்படி காலை 9.30 மணியளவில் தலைநகரில் உள்ள பாதுகாப்பு 
இயக்குநகரத்தின் முன் ஒரு தற்கொலை தாக்குதல்காரன் தன்னைத்தானே வெடிக்கச் செய்ததாக அனடோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது.

நுழைவாயிலில் பாதுகாப்புப் படையினரால் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்ட 
சம்பவத்தில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் லேசான காயங்களுக்கு உள்ளாகினர்.

இதற்கிடையில், இந்த சம்பவத்தில் மலேசியர் எவருக்கும் தொடர்பு இருப்பதாக எந்த புகாரும் இல்லை என்பதை விஸ்மா புத்ரா உறுதிப்படுத்தியது. மேலும் துருக்கியில் 
உள்ள மலேசிய தூதரகம் நிலவரங்களை அணுக்கமாக கண்காணித்து வருவதோடு விரிவானத் தகவலுக்காக உள்ளூர் அதிகாரிகளுடன் நெருக்கமானத் தொடர்பில் இருந்து வருவதாகவும் அது தெரிவித்தது.

துருக்கியில் உள்ள மலேசியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், 
உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் பயண ஆலோசனைகளை எப்போதும் கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Pengarang :