NATIONAL

வெ.15 லட்சம் மதிப்புள்ள கடத்தல் மதுபானங்கள் பறிமுதல்- மூவர் கைது

கோலாலம்பூர், அக் 2- இங்குள்ள செராஸ், சுங்கை பீசி சாலையில் கடந்த
வெள்ளிக்கிழமை காவல் துறையினர் மேற்கொண்ட இரு அதிரடிச்
சோதனைகளில் வரி செலுத்தப்படாத 15 லட்சம் வெள்ளி மதிப்புள்ள
மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு வியட்னாமியப் பெண் உள்பட
மூவர் கைது செய்யப்பட்டனர்.

செமினியிலுள்ள பொது நடவடிக்கைப் பட்டாளத்தின் நான்காவது பிரிவு
சுங்கை பீசி சாலையில் உள்ள வளாகம் ஒன்றில் மேற்கொண்ட
முதலாவது சோதனை நடவடிக்கையில் 44 வயதுடைய வியட்னாமியப்
பெண் கைது செய்யப்பட்டதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி
ஸாம் ஹலிம் ஜமாலுடின் கூறினார்.

அந்தச் சோதனையில் 230,000 வெள்ளி மதிப்புள்ள 108 அட்டைப்
பெட்டிகள் மற்றும் 116 கார்ட்டன்கள் அடங்கிய பல்வேறு ரகங்களிலான
மதுபானங்கள் கைப்பற்றப்பட்டன என்று நேற்று இங்குள்ள மாவட்ட
போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர்
தெரிவித்தார்.

கைதான சந்தேகப் பேர்வழி வழங்கிய தகவலின் பேரில் ஜாலான் சுங்கை
பீசியிலுள்ள மற்றொரு வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில்
கொரோனா எக்ஸ்ட்ரா வகை மதுபானங்கள் அடங்கிய ஒன்பது அட்டைப்
பெட்டிகள் மற்றும் பல்வேறு ரகங்களிலான 1,818 கார்ட்டன் மதுபானங்கள்
பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு 12 லட்சம் வெள்ளியாகும்.
இந்த சோதனை நடவடிக்கையில் மிட்சுபிஷி லோரி ஒன்றும் தடுத்து
வைக்கப்பட்டது என்றார் அவர்.

மற்றொரு நிலவரத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை டேசா
பெட்டாலிங்கிலுள்ள உணவகம் ஒன்றிலிருந்த ஆடவர் ஒருவரை ஐந்து
போலீஸ்காரர்கள் உள்பட அறுவர் கடத்தியது தொடர்பான விசாரணை
அறிக்கை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் பார்வைக்கு
முதலில் கொண்டுச் செல்லப்படும் என ஸாம் தெரிவித்தார்.


Pengarang :